யாழ். நூலகம் டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலைவாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப வடக்கு, கிழக்குக்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வரவு – செலவுத் திட்டம் வெளியாவதற்கு முன்னரே, ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. புதிய அரசாங்கம் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் கடந்த காலங்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஆனால், எம்மை பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை உள்வாங்கியே வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டிய நிலையிலும், வரவு செலவுத்திட்டத்தின் உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக திறைசேரி செயலாளர் மத்திய வங்கி ஆளுநர் போன்றோர் கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், கடந்த வருட வரவு செலவு திட்டத்தினை ஒத்த வரவு செலவுத் திட்டம் ஒன்றே வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக எதிர்பார்த்திருந்தோம்.
பெரும்பாலும் அவ்வாறான வரவு – செலவுத் திட்டம் ஒன்றே வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரையில், கிடைக்கின்ற வாய்ப்புக்களை தவறவிடாமல் பயன்படுத்தி, முன்னோக்கிச் செல்லுகின்ற தரப்பு என்ற அடிப்படையில் தற்போதைய வரவு – செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள், வெறுமனவே எழுத்தில் மட்டும் இல்லாமல், செயலிலும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிதிகள் சீரான முறையில் ஒதுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளது.
வடக்கினை பொறுத்தவரையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்மான வீதிககளை முழுமையாக திருத்துவதற்கு சுமார் 10000 மில்லியன் ரூபா தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அவற்றள் வட்டுவாகல் பாலம் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை போன்றவை உள்ளடக்கப்படவில்லை.
ஆனால் தற்போது வட்டுவாகல் பாலம் மற்றும் இறங்குதுறை உள்ளடக்கி 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னுரிமை அடிப்படையில் வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பூநகரி கௌதாரிமுனை வீதி, கிராஞ்சி, வலைப்பாடு போன்ற பகுதிகளுக்கான வீதி போன்ற பிரதான வீதிகளும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
அதேபோன்று, யாழ். நூலகத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்களும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் கணினி வசதிகளை அதிகரிப்பதற்காகவும் முன்மொழியப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதைவிட, தென்னாசியாவில் சிறந்த நூலகமாக காணப்பட்ட எமது நூலகத்தினை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்துவதன் மூலம் தென்னாசியாவின் தலை சிறந்த நூலகங்களுள் ஒன்றாக விளங்கிய எமது நூலகத்திற்கு இன்னுமொரு பரிமாணத்தினை வழங்க முடியும் என்பதே எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனையாக இருக்கின்றது. இதனை வலியுறுத்தி எமது செயலாளர் நாயகம் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதவிருக்கிறார்.
அதேபோன்று, 30 ஆயிரம் அரச நியமனங்கள் வழங்கப்படவிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவை வழங்கப்படுமாயின், நாடளாவிய ரீதியில் இருக்கின்ற வெற்றிடங்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப அந்த நியமனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது, தமிழ் மொழிப் பரீட்சம் உள்ளவர்களுக்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கடமையாற்ற கூடியவர்களும் முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
ஏன் இதனை வலியுறுத்துகின்றோம் என்று சொன்னால், நல்லாட்சி காலம் என்று சொல்லப்படுகின்ற காலப் பகுதியில், பல்வேறு திணைக்களங்களுக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக மின்சார சபைக்கு பெருமளமானவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக மின்சார சபையின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான சேவை நிலையத்தில் 12 பணியாளர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 4 பணியாளர்கள் மாத்திரம் கடமையாற்றி வருகின்றனர். அங்கு நியமிக்கப்பட்டவர்கள் இன்று இடமாற்றம் பெற்று தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு சென்று விட்டனர்.
ஆனால் நாங்கள் ஆளுந் தரப்பாக இருந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்திருக்கவில்லை.. எனவே இந்த விடயத்தில் ஆளுந்தரப்பை பிரதிநித்துவம் செய்கின்றவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை வலியுத்த விரும்புகின்றோம்.
ஆக, இந்த வரவு செலவுத் திட்டம் எமது மக்களுக்கு நன்மையளிக்குமா இல்லையா என்பதற்கு அப்பால், கிடைத்திருப்பவற்றை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அந்த விடயத்தில், எமது மக்களினால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.