இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில்வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கும் இன்று (02) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சிரேஷ்ட சட்டத்தரணி த.தவராசா தலைமையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு மாநாட்டுக்கு பிரதம அதிதியாக இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கான உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.சி.டபுள்யூ. நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
மேலும், நீதித்துறையில் உள்ள சலுகைகள், தாற்பரியம், சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் சவால்கள், முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் வாதிடப்படும் வழக்குகள் தொடர்பாக நீதிபதிகள் எதிர்கொள்ளும் சவால்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி நீதிபதிகளினால் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இந்த மாநாட்டில் யாழ்ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதியரசர் எம் மனாஸ், மாவட்ட நீதிமன்ற நீதிபதி என். சதீஸ்குமார் உள்ளிட்ட பிரதேச நீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணி சங்க உறுப்பினர்கள், இளம் சட்டத்தரணிகள் பலரும் கலந்துகொண்டனர்.