மின்சாரம் தாக்கி நினைவிழந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட 22 வயது இளைஞன் உயிர் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உடனடியாக வழங்கிய முதலுதவியே அவர் அதிரஷ்டவசமாக உயிர் பிழைக்க காரணம் என்று யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் என். சுகந்தன் தெரிவிக்கின்றார்.
கடந்த மாதம் 23ஆம் திகதி காலை 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சாரத்தால் தாக்கப்பட்டு குறித்த அந்த மாணவன் நினைவிழந்திருந்தார். உடல் விறைப்படைந்திருந்தது.
அருகிலே கட்டட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவியளித்தனர்.
ஒருவர் இதயத்தை இயங்கச் செய்வதற்கு இதயத்தை சீரான இடைவெளியில் அழுத்திக் கொண்டிருந்தார்.
அதேவேளை வாயினால் செயற்கைச் சுவாசம் வழங்கிக் கொண்டிருந்தனர்.
முதலுதவியளித்தவாறு முச்சக்கர வண்டியில் யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 10 நிமிடத்தில் கொண்டு வரப்பட்டார்.
காலை 10.00 மணியளவில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவ்வேளை அவருக்கு சுவாசம் இருக்கவில்லை. இதயத்துடிப்பும் இல்லாதிருந்தது.
உடனடியாக அவருக்கு செயற்கைச் சுவாசம் வழங்கப்பட்டு இதயத்தை இயங்கவைக்க வைத்தியர்களும் தாதியர்களும் 20 நிமிடங்கள் Cardiac Resuscitation செய்தனர்.
இதயம் இயங்க ஆரம்பித்த பின்னர் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இவர் ஒருவாரகாலமாக சிகிச்சை பெற்று கடந்த சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார்.
மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இதயத்துடிப்பு சுவாசம் நின்றபோதும் உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் இதயத்தை சீரான இடைவெளியில் அழுத்தி Cardiac Massage செய்து குருதிச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தி இருந்தனர்.
வாயினால் சுவாசத்தை வழங்கியிருந்தனர். உரியநேரத்தில் வழங்கப்பட்ட முதலுதவியினால் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கி இதயத்தை மீள இயங்கச் செய்ய முடிந்தது.
முதலுதவி வழங்கப்படாதிருந்தால் வைத்தியசாலையில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான இளைஞனை காப்பாற்ற முடியாது போயிருக்கலாம்.
உரிய நேரத்தில் முதலுதவியளித்த இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பொது மக்கள் இத்தகைய நிலைமைகளின் போது முதலுதவி வழங்குவதற்கு அறிந்திருக்க வேண்டும்.
மாணவர்கள், இளைஞர், யுவதிகள் முறையான முதலுதவிப் பயிற்சி பெற்றிருந்தால் அவசர நிலைகளின் போது உயிர்காப்பதற்கு பேருதவியாக இருக்கும். என்று வைத்திய நிபுணர் என். சுகந்தன் தெரிவிக்கின்றார்.