பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் பணித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர் உள்ளிட்ட எவரும் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்காது ஏற்றிச் செல்வதாக முறையிடுகின்றனர்.
குறிப்பாக மருத்துவர்களால் இந்த விடயம் அதிகளவில் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தலைக்கவசம் அணியாது பயணிப்பதால் விபத்துக்களில் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, சட்டம் ஒழுங்கைப்பேணும் வகையில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவும். மாணவர்களை அவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் கோரினார்.
அதற்கு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இது தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனை இறுக்கமாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின்போது, யாழ் ராணி ரயில் மீது இனந்தெரியாதவர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்துவதாக சுட்டிக்காட்டப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்த சில பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதிலளித்ததுடன், ஆளுநர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.