யாழில் தொழில்நுட்ப தொழிற்சாலைகளை நிறுவ முன்வாருங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கு யாழ் ஆயர் அழைப்பு
யாழ்ப்பாணத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நவீன தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளை யாழில் நிறுவ முன்வாருங்கள் என யாழ் ஆயர் மேதகு ஜஸ்ரின் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் (28) பெல்ஜியத்தில் உள்ள பனு மாதா தேவாலயத்தில் நெதர்லாந்து பனுமாத ஆசியயாத்திர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் பனுமாதா திருத்தலம் நோக்கிய 31ஆவது திருப்பயண ஆராதனை வழிபாட்டிற்காக பல்வேறு நாடுகளிலும் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஆயர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றும் போது யாழ்ப்பாணம் படுமோசமான நிலையினை நோக்கி நகர்வடைந்து செல்கிறது. இதற்கு காரணம் வேலையில்லாத பிரச்சினை எனவும் இந்தப் பிரச்சனையை புலம்பெயர்ந்து வெளிநாடுகளிற்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வருபவர்களிடம் தான் கூறியும் அதனை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மனவருத்தத்திற்கு உரிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகம் செல்ல முடியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கும் கடமை புலம்பெயர் தமிழர்களுக்குரியது எனவும் அதற்காக நான் ஆடைத்தொழிச்சாலைகளை நிறுவச் சொல்லவில்லை. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை தான் நிறுவச் சொல்கிறேன். ஏனெனில் யாழ் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த திறமைகள் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு யாராவது முன்வந்தால் இளைஞர்களின் எண்ணங்களை மாற்றி யாழ் இளைஞர்களின் எதிர்காலத்தை நல்லதாக உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்கிய யாழ்ப்பாணம் இப்போது வாள்வெட்டு, கஞ்சா, போன்ற குற்றச்செயல்களிலேயே பெயர்போய் காணப்படுவதாகவும் இந்த நிலைமையினை புரிந்து கொண்டு இளைஞர்களை வேறு வழிக்கு மாற்றாமல் விட்டால் நீங்கள் யாழ்ப்பாணத்தை இழந்து விடுவீர்கள் திரும்பி வந்து பார்க்கும் போது கட்டடங்களை மட்டுமே காண்பீர்கள் மனிதர்களை காணமாட்டீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.