யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (05) ஆரம்பமாகின்றது.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்துக்காக 50 ஆயிரம் ‘சினோபார்ம்’ தடுப்பூசி கிடைத்திருக்கின்றன என்று வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“”இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இடம்பெறும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள், திகதிகள் பற்றிய விபரங்கள் அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளால் அறியத்தரப்படும்.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகள் தொடர்பில் ஒவ்வாமை உடையவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் முதல் கட்டமாக 49 ஆயிரத்து 602 பேருக்கு முதல் கட்டமாக கொரோனாத் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது. இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தேற்றும் பணிகள் கடந்த யூன் 28ஆம் திகதி முதல் இம்மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெற்றன. இதில் 46 ஆயிரத்து 648 பேர் இரண்டாவது தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டனர்” – என்றுள்ளது.