யாழ்ப்பாணம் காரை நகரிலிருந்து பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று திடீரென வழித்தடம் மாறிப் பயணித்துள்ளமையினால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.
வட பிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபையினரின் பணிப் பகிஷ்கரிப்பால் தனியார் போக்குவரத்துச் சபையினரே பொதுமக்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்கி வருகின்றனர்.
எனினும், அந்தச் சேவையில் அடிக்கடி இடம்பெறும் வழித்தடம் மாற்றம் காரணமாக பொதுமக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர்.
காரைநகர்-யாழ்ப்பாணம் சேவையில், 786 வழித்தடத்தினூடாக நேற்று மாலை 6.45 மணியளவில் பயணிக்கவேண்டிய பேருந்து திடீரென்று 784 வழித்தடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஆனைக்கோட்டை, நவாலி, துணவி, சங்கரத்தை, மாவடி, மூளாய் போன்ற பிரதேசங்களுக்கு செல்லவிருந்த பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
குறிப்பாக, பெண்களும் தனியார் கல்வி நிலையம் சென்றுவந்த மாணவர்களும் உட்பட பலர் இவ்வாறு பாதிப்புக்களை எதிர்நோக்கினர்.
இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தொடர்பாக அவர்கள் பஸ் சாரதி, நடத்துநருடன் முரண்பட்டதையும் நேற்று மாலை அவதானிக்க முடிந்தது. இனிமேல் இவ்வாறான நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.