தனது சேனைக்குள் நுழைந்த யானை ஒன்றைக் கொன்று தீயிட்டு எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம், உணகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த இச்சந்தேக நபர் தனது சேனையில் சோளச் செய்கையில் இவர் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் காட்டுயானைகள் தனது சேனைக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதனால் அவர் ஆத்திரமுற்றவராக காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அண்மையில், சந்தேக நபரான விவசாயி தனது சேனையில் காவல் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சோளச் சேனையினுள் காட்டுயானையொன்று நுழைந்துள்ளது. அதன் போது அந்நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியோ அல்லது மின்சாரம் செலுத்தியோ கொலை செய்துள்ளார் எனவும் அதன்பின்னர் உயிரிழந்த யானையை துண்டங்களாக வெட்டி தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாகவும் மொரகொட பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதற்கமைய, மொரகொட பொலிஸார் உணகொல்லேவ பிரதேசத்திலுள்ள குறித்த சோளச் சேனைக்கு சென்று கடந்த 20 ஆம் திகதி சோதனையிட்டபோது, சேனையில் ஆங்காங்கே யானையினது என கருதப்படும் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபரான சேனை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சந்தேக நபர் யானையைக்கொன்று, இறப்பர் டயர்களை பயன்படுத்தி அதனை எரித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.