அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் அழைப்பின்பேரின் நேற்றுக் காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர் சுமார் மூன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். காலை 7.30 மணிக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர் வாக்குமூலம் வழங்கிய பின்னர் முற்பகல் 11 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அரச தலைவர் மற்றும், பாதுகாப்பு முன்னாள் செயலர் கொலை முயற்சி தொடர்பாக ஊழல் ஒழிப்புப் படையணியின் நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல்களுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது