மைத்திரியை தேடிச்சென்ற உலகத் தலைவர்கள் – மாற்றத்தின் ஆரம்பமா?
ஜப்பானில் நடைபெறும் G7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலகத் தலைவர்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமர்ந்திருந்த ஆசனத்தை தேடிச்சென்று அவர்களது அன்பை பறிமாறியதுடன், சினேகபூர்வமான அன்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை வரலாற்றில், முன்னைய காலத்தில் இலங்கை ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது வழமையே, நடைமுறையில் உள்ள மரியாதையே அனைவருக்கும் வழங்கப்படும். ஆனாலும் வழமைக்கு மாறாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த ஆசனம் நோக்கி உலகின் முக்கிய நாட்டுத் தலைவர்கள் சென்று சந்தித்துள்ளமை சர்வதேசத்தின் மத்தியில் மிக முக்கியமான ஒரு விடயமாக கருதப்படுகின்றது.
இலங்கையின் எதிர்கால பயணத்திற்கான சமிக்ஞைகளாகவும், பாரிய உறுதுணையாகவும் இருக்குமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதன்போது மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்போது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் வினவியுள்ளார்.
குறிப்பாக இறுதி கட்ட போரின் போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வினவியுள்ளதுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.