அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசியல் ரீதியிலான தீர்மானமே தேவை என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் கொழும்பில் இன்று மாலை பேச்சு நடத்தவுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அரச தலைவர் சிறப்புச் செயலணியின் கூட்டம், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை அரச தலைவர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனித்துச் சந்திப்பதற்கு நேரம் கோரியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
தண்டனை வழங்கப்பட்ட 55 அரசியல் கைதிகள் தொடர்பிலும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவே முடிவு எடுக்க முடியும். அதனடிப்படையில் அவர்களை மன்னிப்பில் விடுவிப்பது தொடர்பில் ஆராயப்படும்.
அரசியல் கைதிகள் தொடர்பில், அரசியல் ரீதியான தீர்மானத்தை எடுத்து அவர்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரச தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அழுத்தமாக எடுத்துரைக்கவுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், சட்டமா அதிபர் நேற்றுத் தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.