ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் தலைமைத்துவத்துக்கு கோத்தபாய ராஜபக்ஷ பொருத்தமானவர் என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர்,
தற்போதைய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சிக்காரர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றது. உரிய முறையில் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைப்பதில்லை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கட்சி வலியுறுத்துவதன் காரணமாக அவர் போட்டியிட்டே ஆகவேண்டும்.
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அவரது வாக்குறுதியை இந்த விடயத்தில் அவர் மீறியே ஆகவேண்டும்.
சுதந்திரக் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கும் கட்சியின் இரண்டாம் தலைமைத்துவத்துக்கும் கோத்தபாய ராஜபக்ஷ பொருத்தமானவர். இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சிதான் இந்த விடயத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் நான் முற்றாக மைத்திரி அணியுடன் இணைந்துவிட்டேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக நான் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.