இதுவொரு கனத்த மாதம். ஈழ மண் துடித்தசைகின்ற துயருறு மாதம். எம் மனங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் முள்ளாய் குற்றுகின்ற அனல் மாதம். ஒரு இனம் தன்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக உயிரிலும் மேலாய் நடாத்திய போராட்டத்தை ஒடுக்குவதற்காய் அவ் இனத்தின் உயிர்கள் சிதைத்துத் திருகப்பட்ட இனப்படுகொலையின் நினைவு மாதம். எங்கள் வரலாற்றில் இருந்து குருதியின் நிணம் மாறாத மாதம். எங்கள் மண்ணில் இருந்து இனப்படுகொலையின் வடு தீராத மாதம். ஈழத் தமிழ் இப் பூமியில் உள்ளவரையில் நீதிக்கும் உரிமைக்குமாய் உண்மையோடு வாழவும் போராடவும் வலியுறுத்துகின்ற வலி தந்த மாதம், இம் மே மாதம்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பொருளாதாரப் பிரச்சினை ஒரு பெரும் அரசியல் கலவரமாக அரசியல் பிரச்சினையாக மாறியிருக்கிறது. அதாவது ஸ்ரீலங்காவை ஆளுகின்ற கட்சிக்கும் அதற்கு எதிர்கட்சிக்கும் அக் கட்சித் தரப்பினர் அனைவர் மீதான பெரும்பான்மையின சிங்கள மக்களின் சீற்றத்திற்கும் இடையிலான ஒரு அரசியல் குழப்ப நிலை, பொருளாதாரக் காரணிகளுக்காக தோன்றிருக்கிறது. இக் காலகட்டத்தை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் மிகுந்த அவதானத்துடனும் இங்கே நம்முடைய நீதிக்கும் உரிமைக்குமான பயண வழிகளில் முட்களையும் மண்ணையும் போடாமல் எம் தனி வழியை குறித்து தீராத அவதானத்துடன் பயணிக்க வேண்டிய காலமும் இதுவே.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கிறது. இலங்கையின் இன்றைய அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சவின் பொருளாதார மற்றும் நிர்வாக திறனின்மையால் ஏற்பட்ட இந்த நெருக்கடி இலங்கைத் தீவு மக்கள் அனைவரையும் பாரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளது. ஈழ இறுதிப் போரில் தமிழ் மக்களை மோசமான முறையில் இனப்படுகொலை செய்து, அறத்திற்கு மாறான வகையில் மீறல்களும் இனப்படுகொலைகளும் நிறைந்த யுத்த களத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை வாயிலாக பெற்றப்பட்ட யுத்த வெற்றியை முன்னிறுத்தி கடந்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றார்.
ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நடந்த இனப்படுகொலைப் போர் ஆறாத றணங்களை விட்டுச் சென்றிருக்கிறது. போரில் கால், கைகளை இழந்தவர்களும் கண்களை இழந்தவர்களும் இனவழிப்புப் போரின் கொடூரத்தை நினைவுபடுத்தியபடி நம் முன்னால் நடமாடுகின்றனர். போரில் பிள்ளைகளை இழந்த தாய்மார்களும் தாய்மார்களை இழந்த பிள்ளைகளுமாய் வெறுமை வாழ்வை வாழ்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி எம் மக்களில் கணிசமானவர்கள் வீதிகளில் கரைந்து போகின்றனர். போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியைத் தேடி வாசல்களில் தவம் கிடக்கிறோம்.
எங்களுக்கு போர் நினைவுபடுத்தும் மிகப் பெரும் துயரத்தை வெற்றி என்றும் அரசியல் முதலீடு என்றும் கொண்டாட்டம் என்றும் சொல்லுகின்ற தென்னிலங்கையின் அணுகுமுறை எங்களை இன்னொரு தேசத்தவர்களாகவே உணரச் செய்யும். ஆம் நாங்கள் ஈழத் தமிழர்கள். ஸ்ரீலங்கா அரசின் எந்த அடையாளங்களுக்குள்ளும் நாம் இல்லை. ஏனெனில் அந்த அடையாளங்கக்கு வெளியில் தனித்துவமான அடையாளங்களை கொண்டவர்கள் நாம் என்பதனால்தான் ஈழ மக்கள் ஸ்ரீலங்கா அரசால் அதன் படைகளால் இனவழிப்பு செய்யப்பட்டார்கள். இந்த துயரத்தின்மீதுதான் இனக்கொலையால் உமிழும் சாம்பலின் மீதுதான் ஸ்ரீலங்காவின் ஆட்சி கட்டி எழுப்பப்படுகிறது.
அண்மைய காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஸ்ரீலங்காவில் போராட்டங்கள் நடந்த போது தமிழ் மக்கள் அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்ததும் இதனால்தான். ஏனென்றால் இன்றைய அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் களத்தில் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை ஆயுதமாக அளித்தார்கள். ஆனால் அன்றைக்கு சிங்கள தேசம் பெரும்பான்மையாக கோத்தபாயவை ஆதரித்தது. தலைமைத்துவமும் நிர்வாகத்திறனும் இல்லாத ஒருவர் யுத்த வெற்றியுடன் தொடர்புடையவர் என்ற அடையாளத்திற்காக மாத்திரம் ஆட்சியில் கொண்டுவரப்படுகையில் அதற்கு எதிரான மனநிலையை ஈழ மக்கள் வெளிப்படுத்துவது மிகவும் நியாயமானது.
இந்த வினைகளினால் 2009 ஈழப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பதின்மூன்று ஆண்டுகளில் சிங்கள தேசம் இலேசாகப் பற்றி எரிந்தது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகாக்களின் இடங்கள் பற்றி எரிந்தன. தீயில் கருகிய தீவை முள்ளிவாய்க்கால் இனவழிப்புடன் ஒப்பிடலாமா? நிச்சயமாக முடியாது. சிலர் காலிமுகத்திடல் கூடாரங்களை முள்ளிவாய்க்கால் கூடாரங்களுடன் ஒப்பிடுகின்றனர். சிலர் காலிமுகத்திடல் கடலில் அமிழ்த்தப்பட்டவர்களை நந்திக்கடலுடன் ஒப்பிடுகின்றனர். சிலர் முள்ளிவாய்க்கால் நிர்வாணத்தை காலிமுகத்திடல் நிர்வாணத்துடன் ஒப்பிடுகின்றனர். ஒருபோதும் இப்படி ஒப்பிடவே முடியாது.
ஏனெனில் முள்ளிவாய்க்காலில் நான்கு பக்கங்களாலும் சூழப்பட்ட போர். உலகின் கை ஓங்கிய நாடுகளின் கரங்கள் நீண்ட போர். குருதியும் நிணமும் வீசப்பட்ட கூடாரங்கள் பதுங்குகுழிகளாகவும் சவக்குழிகளாகவும் ஆகிய இனவழிப்புப் போர். பெண்களை மாத்திரமின்றி, ஆண்களையும் நிர்வாணப்படுத்தி இனமேலான்மை ஒடுக்குமுறை புரிந்த போர். யோனிகளை மாத்திரமின்றி கருப்பைகளையும் கிழித்த இனவழிப்புப் போர். உணவுக்கு தவித்த குழந்தைகள், உயிருடன் கையளிக்கப்பட்டவர்கள் என எம் இனத்தின் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கிய இனவழிப்புப் போரை காலிமுகத்திடலின் சில நாள் போராட்டத்துடன் ஒரே சமூகத்திற்குள் ஏற்பட்ட கலவரத்துடன் ஒப்பிட முடியுமா? ஒருபோதும் முடியாது.
கடந்த காலத்தில் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்று எங்கள் மக்கள் குரல் எழுப்பிய போது ராஜபக்சே தரப்பினர் தம்மை அசைக்க முடியாது என்றனர். ராஜபக்சக்களுக்கு சாமரம் வீசுகின்ற தமிழ் துரோகிகள் சிலரும் இனி அரசை எதிர்க்கக்கூடாது அவர்களை வீழ்த்த முடியாது என்று சரணடைந்தார்கள். ஆனால் எங்கள் மண்ணில் இருந்து இனப்படுகொலையாளிகளுக்கு எதிரான போராட்டமும் குரலும் எழுந்தபடியே இருக்கிறது. அக் குரலை எழுப்பி உறைந்துபோன எத்தனையோ உயிர்கள் உண்டு. முள்ளிவாய்க்காலின் பின் இனவழிப்புத் திட்டத்தினால் இன்றும் சத்தம் இன்றி கரைந்துபோகின்ற உயிர்கள் பல. முள்ளிவாய்க்காலின் சாபம் விடாது உங்களை என்று திட்டுகின்ற எங்கள் தாய்மார்களின் குரலை வெறும் புலம்பலாக பார்த்தாலும்கூட எல்லா வினைகளுக்கும் ஒரு மறுவினை உண்டு என்ற அறிவியலின் அடிப்படையில் பார்க்கின்ற போதும் ஒரு மே மாத்தில் மகிந்த மீண்டும் தண்டிக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்கால் சாபத்தின் துவக்கம் மாத்திரமே.
தீபச்செல்வன்