மேற்கிந்தியத்தீவுகளுடனான மூன்றாவது டி-20 போட்டியில் 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி டி-20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா, மே.இ.தீவுகளுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது.
இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
அதன் பின்னர் டி-20 தொடரின் முதல் போட்டியில் மே.இ.தீவுகள் 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற, இரண்டாவது போட்டியில் 16 ஓட்டங்களினாலும், மூன்றாவது போட்டியில் ஒரு ஓட்டத்தினாலும் வெற்றி பெற்றிருந்தது தென்னாபிரிக்க அணி.
ஜூலை 1 நடைபெற்ற நான்காவது போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி மீண்டும் 21 ஓட்டங்களினால் வெற்றி பெற, தொடர் 2:2 என்ற கணக்கில் சமனிலை பெற்றது.
இந் நிலையில் கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் அதிகபடியாக குயின்டன் டி கோக் 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களையும், அய்டன் மார்க்ராம் 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களையும் பெற்றனர்.
169 என்ற ஓட்ட இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மே.இ.தீவுகள் அணியினரால் 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
அணி சார்பில் அதிகபடியாக எவின் லூயிஸ் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள, 5 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களையும், சிம்ரன் ஹெட்மேயர் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும், விஹான் முல்டர், ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் ஜார்ஜ் லிண்டே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி டி-20 தொடரை 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக அய்டன் மார்க்ராமும், ஆட்டநாயகனாக தப்ரைஸ் ஷம்ஸியும் தேர்வானார்கள்.