மேல்மாகாணத்தில் அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் தங்கள் பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட்டு மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்து மாகாண கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபம் வாபஸ்பெறப்பட்டுள்ளதாக தொழில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மேல்மாகாணத்தில் அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் தங்கள் பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட்டு மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்து மாகாண கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேல்மாகாணத்தில் அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் தங்கள் பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட்டு மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்து மாகாண கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபம் வாபஸ்பெறப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு வேண்டுமென்றே அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில அதிகாரிகளின் சுற்றறிக்கை மற்றும் கடிதங்களை ரத்து செய்வது அவசியமாகும்.
இவ்வாறான நடவடிக்கைகளின்போது நாங்கள் நேரடியாக தலையிட்டு அரசாங்கத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். அதனால் அரச அதிகாரிகள் காலாவதியான பணி நடைமுறைகளை கைவிட்டு, நாட்டை புதிய மற்றும் முற்போக்கான திசையில் கொண்டு செல்ல அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள், சம்பள முரண்பாடுகள், இடமாற்றக் கொள்கைகள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகளைப் பெறுவதில் சிரமங்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், அவர்கள் மேலதிக வகுப்பு நடத்துவதை தடை செய்வதற்கு ஏன் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்கிறோம் என்றார்.
எவ்வாறாயினும் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்ச நளிந்த ஜயதிஸ்ஸ இதுதொடர்பில் குறிப்பிடுகையில், குறித்த சுற்று நிருபத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவித்திருந்தார்.
குறித்த சுற்று நிருபம் கடந்த 20ஆம் திகதி மேல்மாகாண கல்விச் செயலாளர் நிஷான்தி ஜயசிங்கவின் கையொப்பத்துடன் விநியோகிக்கப்பட்டிருந்தது.
அதில், மாகாணத்தில் சில ஆசிரியர்கள் தங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களிடம் பணம் அறவிட்டுக்கொண்டு வேறு இடங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதாகவும் மேலதிக வகுப்புகளுக்கு வருகை தராமல் இருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மேல்மாகாண ஆசிரியர்கள் தங்களின் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில், பாடசாலை நேரத்துக்கு பின்னர் அல்லது வார இறுதி விடுமுறை தினங்கள் மற்றும் அரச விடுமுறை தினங்களில் பல்வேறு வெளிப்பிரதேசங்களில் பணம் அறவிட்டுக்கொண்டு மேலதிக வகுப்பு நடத்து நடத்துவதை குறித்த சுற்று நிருபம் மூலம் தடை செய்திருந்தது.
அத்துடன் சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலாேசனைகளை கருத்திற்கொள்ளாமல் செயற்படும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் குறித்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.