நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள சகல தரப்பினரதும் நலன் கருதி , 15 ஆம் திகதி புதன்கிழமை முதல் மேலதிகமாக புகையிரதங்கள் மற்றும் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 13 திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
புதன்கிழமை முதல் கொழும்பு – கண்டி புகையிரத சேவையில் மேலதிகமாக இரு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அதற்கமைய தினமும் அதிகாலை 5.20 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 8.44 க்கு கண்டியைச் சென்றடையும். அதே போன்று அதிகாலை 4.50 க்கு கண்டியிலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 7.40 க்கு கொழும்பை சென்றடையும்.
களனிமிட்டியாவத்த பகுதியில் வக புகையிரத நிலையத்தில் காலை 6.20 க்கு புறப்படும் புகையிரதம் காலை 8.12 க்கு கொழும்பை வந்தடையும்.
அதே போன்று கொழும்பிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் புகையிரதம் 5.43 க்கு வக புகையிரத நிலையத்தை வந்தடையும்.
அதே போன்று கல்கிஸையிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 5.30 க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.
இந்த புகையிரதம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 5.30 க்கு கல்கிஸை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
இந்த புகையிரத சேவை 17 ஆம் திகதி ஆரம்பமாகும். வார இறுதி நாட்களில் வெளியிடங்களுக்குச் செல்வோருக்காக இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு நிரந்தர புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் அதிகாலை 4.15 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 8.15 க்கு அநுராதபுரத்தை சென்றடையும். அதேபோன்று அதிகாலை 3.45 க்கு அநுராதபுரத்திலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 8 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
இவை தவிர பாடசாலை மாணவர்களுக்காக 20 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பான நேர அட்டவணை ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் என்றார்.