தம்புள்ளையில் புதன்கிழமை (30) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அசத்திய மேற்கிந்தியத் தீவுகள் 195 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 – 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றி பெற்றிருந்தது.
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைக் குவித்தது.
ஜோர்டன் ஜோன்சன் குவித்த சதமும், ஜொஷுவா டோர்ன், தாரிக்யூ எட்வேர்ட் ஆகியோர் பெற்ற அரைச் சதங்களும் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தன.
ஜோர்டன் ஜோன்சன் 105 ஓட்டங்களையும் ஜொஷுவா டோர்ன் 56 ஓட்டங்களையும் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 160 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்
பின்வரிசையில் தாரிக்யூ எட்வேர்ட் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் நேதன் எட்வேர்டுடன் 8ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களை தாரிக்யூ எட்வேர்ட் பகிர்ந்தார். முன்னதாக ஆரம்ப வீரர் ஏட்றியன் வெய்ர் 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இலங்கை பந்துவீச்சாளர்களில் ஸ்னேத் ஜயவர்தன 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
321 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இல்ஙகை 30.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இலங்கை இளைய வீரர்களின் கவனக் குறைவான துடுப்பாட்டங்களும் மோசமான அடி தெரிவுகளும் தோல்விக்கு காணரமாக அமைந்தது.
இலங்கை இளையோர் துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரம் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
தினுர களுபஹன 18 ஓட்டங்களையும் மெல்ஷ தருப்பதி 51 ஓட்டங்களையும் விஹாஸ் தேவ்மிக்க ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
8 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற சுப்புன் வாடுகேயுடன் 7ஆவது விக்கெட்டில் மெல்ஷ தருப்பதி 46 ஓட்டங்களைப் பகிர்த்திராவிட்டால் இலங்கை இளையோர் அணியின் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கும்.
பந்துவீச்சில் இசை தோர்ன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தேஷோன் ஜேம்ஸ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் எட்வேர்ட் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாவேந்த்ரா தீன்தயாள் ஒரு ஓட்டத்துக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.