மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2 ஆவது கடைசியமான டெஸ்ட் போட்டியில் 109 ஓட்டங்களால் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை சமநிலைப்படுத்தியது.
மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 302 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை நிறுத்தியது.
துடுப்பாட்டத்தில் பவாட் அலாம் டெஸ்ட் அரங்கில் தனது 5 ஆவது சதத்தை (124) பூர்த்தி செய்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸ்களில் (22) ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் சஹீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.
152 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிஸ்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்தியது.
329 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடரின் ஆட்ட நாயனாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி தெரிவானார்.
இந்த இரு அணிகளும் பங்கேற்ற 2021-2023 பருவ காலத்துக்கான டெஸ்ட் வல்லவர் போட்டியின் தத்தமது முதல் டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.