கொழும்பு மாநகர சபையின் விளையாட்டுத்துறை மற்றும் பொழுதுபோக்கு திணைக்களம் நடத்திய மேயர் சவால் கிண்ண கலப்பு இன வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இராணுவ அணி சம்பியனானது.
பி.ஆர்.சி. மைதானத்தில் வார இறுதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேகலு வித்தியாலயத்தின் இளம் வலைபந்தாட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய கேகாலை மாவட்ட அணியை 41 – 39 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு இராணுவம் சம்பியனானது.
இறுதிப் போட்டியில் இராணுவத்துக்கு கடும் சவால் விடுத்த கேகாலை மாவட்ட அணி கடைசி நேரத்தில் இழைத்த தவறு களால் 5 கோல்களைத் தொடர்ச்சியாக இராணுவ அணிக்கு விட்டுக்கொடுத்து தோல்வி அடைந்தது.
போட்டியின் 1ஆவது 15 நிமிட ஆட்டநேர பகுதியில் இரண்டு அணிகளும் தலா 11 கோல்களைப் போட்டு சமநிலையில் இருந்தன.
எனினும் 2ஆவது 15 நிமிட ஆட்டநேர பகுதியை (12 – 8) என தனதாக்கிக்கொண்ட இராணுவம் இடைவேளையின்போது 23 – 19 எனற் கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.
3ஆவது 15 நிமிட ஆட்டநேர பகுதியில் சிறப்பாக விளையாடிய கேகாலை மாவட்ட அணி அப் பகுதியை 10 – 8 என தனதாக்கிக்கொண்டது. எனினும் இராணுவ அணி தொடர்ந்தும் 31 – 29 என முன்னிலையில் இருந்தது.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து தவறுகளை இழைத்த கேகாலை மாவட்ட அணி அநாவசியமாக கோல்களைக் கொடுத்ததால் 4ஆவது 15 நிமிட ஆட்ட நேர பகுதியை இராணுவம் 10 – 8 என தனதாக்கி ஒட்டுமொத்த நிலையில் 41 – 37 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று மேயர் சவால் கிண்ணத்தை சுவீகரித்தது.
இறுதிப் போட்டியில் இராணுவத்தைச் சேர்ந்த இமாஷி செவ்வந்தி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பாரத ரணதுங்க சிறந்த வீரருக்கான விருதையும் வென்றெடுத்தனர்.
இறுதிப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இரத்தினபுரி மாவட்ட அணியை 43 – 31 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கடற்படை அணி 3ஆம் இடத்தைப் பெற்றது.
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க பிரதம அதிதியாகவும் பிரதி மேயர் எம்.ரி.எம். இக்பால், இலங்கை வலைபந்தாட்ட சங்கத் தலைவி ரஞ்சனி ஜயக்கொடி, ஆசிய வலைபந்தாட்ட சங்கத்தின் உதவித் தலைவி விக்டோரியா லக்ஷ்மி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு பரிசல்களை வழங்கினர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]