மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான சிறப்பு ரயிலுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு, சிஐடியு நீலகிரி மாவட்டச் செயலாளர் ஜே.ஆல்தொரை அனுப்பியுள்ள மனுவில்கூறியிருப்பதாவது:
மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே சிறப்பு ரயில் (வண்டி எண் 06171) காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு குன்னூர் சென்றடையும். மறு மார்கத்தில் (வண்டி எண் 06172) மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றலா துறையை ஊக்கவிக்கும் வகையில் குன்னூருக்கு சிறப்பு ரயிலை அறிவித்துள்ள ரயில்வே துறையின் அறிவிப்பை சிஐடியு வரவேற்கிறது. அதேநேரம், இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு பெரியவர்களுக்கு ரூ.1100, குழந்தைகளுக்கு ரூ.850, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு ரூ.800, குழந்தைகளுக்கு ரூ.500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு மார்ச் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது,ஆனால், இந்த சிறப்பு ரயிலில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் என்பது மிக, மிக அதிகமாகும். இதன்காரணமாக சாதாரண ஏழை, எளிய மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆகவே, இந்த ரயில் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் குறைத்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என சிஐடியு நீலகிரி மாவட்டக்குழு சார்பாக கேட்டுக்கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.