மெல்பனில் இலக்கிய சந்திப்பு
புதிய கதைத்தொகுதி வெளியீடு
கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியா வருகை தருகிறார்.
ஶ்ரீரஞ்சனியுடனான இலக்கிய சந்திப்பும், அவரது புதிய சிறுகதைத் தொகுதி ஒன்றே வேறே நூலின் அறிமுக அரங்கும் மெல்பனில் இம்மாதம் 30 ஆம் திகதி ( 30-10-2022 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர், எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன் அவர்களின் தலைமையில் மெல்பனில் வேர்மன் தெற்கு சமூக இல்லத்தில் ( Vermont South Community House – Karo bran Drive, Vermont South, Vic – 3133 ) நடைபெறும்.
இலங்கை மகுடம் பதிப்பகத்தின் வெளியீடாக வரவாகியிருக்கும் ஶ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே கதைத் தொகுதியின் வாசிப்பு அனுபவம் சார்ந்த தமது நயப்புரைகளை மெல்பன் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் திரு. பாலசந்தர் சௌந்தர பாண்டியன், திருமதி கலாதேவி பாலசண்முகன் ஆகியோர் சமர்ப்பிப்பர்.
இலங்கையில் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் பின்னர் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் ஶ்ரீரஞ்சனி, இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியாவர். கொழும்பில் உயர்தரக்கல்லூரி ஒன்றில் விஞ்ஞான பாட ஆசிரியராகவும் பணியாற்றியவர். இலங்கை, தமிழக மற்றும் புகலிட தேசத்து இதழ்களிலும் சிறுகதைகளை எழுதிவருபவர்.
ஶ்ரீரஞ்சனியின் நான் நிழலானால் கதைத் தொகுதி 2010 ஆம் ஆண்டிலும், உதிர்தலில்லை இனி என்ற கதைத்தொகுதி 2018 ஆம் ஆண்டிலும் வெளிவந்தவை.
பத்திரிகைகள், இதழ்களில் எழுதிய உளவியல் சார்ந்த கட்டுரைகள் சிலவற்றை தொகுத்து பின்தொடரும் குரல் என்ற நூலையும் முன்னர் வரவாக்கியுள்ளார்.
—-0—