நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முதலாவது போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் அபார சதம் குவித்து இலங்கைக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்துள்ளார்.
இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றதை அடுத்து 285 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுபெடுத்தாடும் நியூஸிலாந்து 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதன் காரணமாக போட்டியின் கடைசி நாளான திங்கட்கிழமை (13) எதுவும் நிகழலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
டொம் லெதம் 11 ஓட்டங்களுடனும் முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
5 ஓட்டங்களுடன் டெவன் கொன்வேயை கசுன் ராஜித்த ஆட்டமிழக்கச் செய்தார்.
போட்டியின் 4ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி 6 விக்கெட்களை 102 ஓட்டங்களுக்கு இழந்தது.
மொத்த எண்ணிக்கை 95 ஓட்டங்களாக இருந்தபோது இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், 5ஆவது விக்கெட்டில் தினேஷ் சந்திமாலுடன் 105 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் தனஞ்சய டி சில்வாவுடன் 60 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தார்.
தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஏஞ்சலோ மெத்யூஸ் 235 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 115 ஓட்டங்களைப் பெற்று களம்விட்டு வெளியேறினார்.
தனது 101ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் குவித்த 14ஆவது சதம் இதுவாகும்.
அவர் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் நிரோஷன் திக்வெல்ல ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். பின்வரிசையில் கசுன் ராஜித்த 11 ஓட்டங்களைப் பெற்றார். தனஞ்சய டி சில்வா நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் ப்ளயார் டிக்னர் 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மெட் ஹென்றி 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டிம் சௌதீ 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இது இவ்வாறிருக்க, இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய நிரோஷன் திக்வெல்ல அடுத்த டெஸ்ட் போட்டியில் நீக்கப்படுவார் என கருதப்படுகிறது.
உள்ளூர் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியவரும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சதங்கள் குவித்தவருமான நிஷான் மதுஷ்க 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட அழைக்கப்படுவார் என நம்பப்படுகிறது. அதில் ஒரு இரட்டைச் சதமும் அடங்குகிறது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை 355 ஓட்டங்களையும் நியூஸிலாந்து 373 ஓட்டங்களையும் பெற்றன.