பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களில் உள்ளடக்கப்படாத இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்களான எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் திமுத் கருணாரட்ண இருவரையும் இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரில் இணைத்துக்கொள்வது தொடர்பில் தாம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் ஆகிய இருவகையான தொடர்களில் இலங்கையுடன் விளையாடுவதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் கடந்த 28 ஆம் திகதியன்று இலங்கை வந்தடைந்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின்போது, கொவிட் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவருக்கும் இந்திய அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணியில் இடம் வழங்கப்படமாட்டாது என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், எஞ்சலோ மெத்தியூஸ், திமுத் கருணாரட்ண ஆகியோர் இந்திய தொடருக்கு எதிரான இலங்கை அணியில் இடம் கிடைக்குமா? என கிரிக்கெட் விமர்சகர்கள் பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் பிரமோதய விக்ரமசிங்க கூறுகையில்,
“மெத்தியூஸ் மற்றும் திமுத் இருவரும் சிறந்த அனுபவமிக்க வீரர்கள். அவர்கள் இருவரையும் இந்திய அணிக்கெதிரான தொடரில் இணைத்துக்கொள்வது தொடர்பில் இதுவரை முடிவு எடுக்கவில்லை. அது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம்” என்றார்.
இதேவேளை இந்திய அணிக்கெதிரான தொடரில் அஷான் பிரியன்ஜன், அசேல குணரட்ண, சந்துன் வீரக்கொடி, ரொஷேன் சில்வா, சத்துரங்க டி சில்வா, டில்ஷான் முனவீர, எஞ்சலோ பெரேரா, மிலிந்த சிறிவர்தன, பிரபாத் ஜயசூரிய,லஹிரு மதுஷங்க ஆகிய 10 வீரர்கள் இந்திய அணிக்கெதிரான தொடருக்காக உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் 10 பேரும் ‘பயோ பபள்’ சுகாதார வழிமுறைக்காக கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.