படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் என்பது பழமொழி.ரோட்டைக் கெடுத்தான் என்பது புதுமொழியாக உருவாகியுள்ளது. கோவையில் படித்த பட்டதாரிகளால் தான் அதிகளவில் விபத்து நடப்பது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தேசிய அளவில், விபத்துக்களில் முதலிடம் பிடித்துள்ளது தமிழகம்; அதிலும் கோவை முன்னணியில் உள்ளது. ஆண்டுக்கு ஆயிரம் பேர், கோவை மாவட்டத்தில் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். பெரும்பாலான விபத்துக்களுக்கு, விதிமீறலும், வேகமுமே காரணமாகவுள்ளது.இவற்றைத் தடுக்கும்பொருட்டு, ‘ஸ்பீடு கவர்னன்ஸ்’ கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையும் எடுத்து வருகிறது. ஆனால், கோவையில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
வாகனங்களின் எண்ணிக்கையைப் போலவே, விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய விபத்துக்கு காரணமானவர்களை வகைப்படுத்தி, பட்டியலிட்ட கோவையிலுள்ள பொறியியல் கல்லுாரி மாணவர்கள் இது தொடர்பாக, கோவையில் விரிவான ஆய்வு ஒன்றை சமீபத்தில் மேற்கொண்டனர்.விபத்துக்களை ஏற்படுத்துவோரிடம் சாலை பாதுகாப்பு விதிகள் தொடர்பான விழிப்புணர்வு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பொருட்டு, விபத்தை ஏற்படுத்துவோரின் கல்வியறிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில்,அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது, படிக்காத பாமரர்களை விட, படித்த பட்டாரிகளே அதிகளவு விபத்துக்குக் காரணமாகவுள்ளது உறுதியாகியுள்ளது. கோவையில், கடந்த ஓராண்டில், நடந்த விபத்துகளுக்கு காரணமாக இருந்தவர்களில், எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 612 பேர் மட்டுமே; அடுத்ததாக, 9 – 10 வரை படித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 733; ஆனால், பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இரண்டு லட்சத்து,14 ஆயிரத்து, 771 பேர்.
படித்தவர்கள், அதிக விபத்தை ஏற்படுத்தி, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன், பிறருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்துகின்றனர். சாலை விதிகளையும் இவர்கள் அதிகம் மதிப்பதில்லை. அதேநேரத்தில், படிப்பறிவு இல்லாதவர்கள் விபத்து குறித்து யோசிக்கின்றனர். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றனர் என்பதையும் கணக்கெடுப்பு தெளிவாக்கியுள்ளது.
போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்னார்வலர்கள் கூறுகையில், ‘படித்தவர்கள், சாலை விதிகளை மதித்தால், இத்தனை விபத்துக்கள் நடக்க வாய்ப்பில்லை. பிறக்கப்போகும் புத்தாண்டிலாவது, சாலை விதிகளை மதிப்பதற்கு, கோவையிலுள்ள படித்தவர்கள், படிக்காதவர்கள் இணைந்து உறுதி எடுக்க வேண்டும். அப்போது தான், விபத்திலா கோவையை உருவாக்க முடியும்’ என்கின்றனர்.
‘படித்தவர்கள்,’ புத்தாண்டில் இதற்கான உறுதிமொழியை எடுத்தால் எல்லோர்க்கும் நலம்.
தெரியலைன்னா தெரிஞ்சுக்கோங்க!
மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் உதயகுமார் கூறுகையில், ”சாலை விதிமுறைகள் என்ன, வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியது என்ன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். தெரியாதவர்கள், கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள, போக்குவரத்துப் பூங்காவிற்கு வந்தால், ‘வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும், இயக்க வேண்டும்’ என்பது குறித்து விழிப்புணர்வு செய்முறை அனைத்தும் இலவசமாக காற்றுத்தரப்படுகிறது. சாலை விதிமுறைகள், விபத்துக்கான காரணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்றார்.