பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பட்டேல் சமூகத்தினரின் போராட்டங்கள் உள்ளிட்டவற்றால் குஜராத் தேர்தலில் ஏதாவது மாற்றம் நிகழும் என்று இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி மீண்டும் பி.ஜே.பி-யே ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இது, ஒருவிதத்தில் அவர்களுக்கு ஆறுதலே என்றாலும்…. மறுவிதத்தில், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குக் குஜராத்தில் இடங்கள் கிடைக்காதது வேதனையே.
காங்கிரஸ் வளர்ச்சி!
இத்தனைக்கும் பிரதமரின் சொந்த மாநிலம் குஜராத். அதுதவிர, 1995-ம் ஆண்டுமுதல் பி.ஜே.பி-யின் கோட்டையாகவும் இருக்கிறது. அதேவேளையில், 2012 தேர்தலில் வெற்றிபெற்ற 119 இடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை வெற்றி முன்னிலை சதவிகிதம் பி.ஜே.பி-க்குக் குறைவாகவே உள்ளது. நடந்து முடிந்த இந்தத் தேர்தலில், பி.ஜே.பி., 99 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. எனினும், காங்கிரஸ் 77 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. இதனைவைத்துப் பார்க்கும்போது பி.ஜே.பி. ஓரளவு சரிவையே சந்தித்திருக்கிறது என்று சொல்லலாம். அதேவேளையில், காங்கிரஸ் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதுவும், கடந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகக் குஜராத்தில் காங்கிரஸுக்கு இவ்வளவு தொகுதிகள் கிடைத்திருப்பது அதிசயம்.
‘‘கேள்விக்குறியாக்கி இருக்கிறது!’’
குஜராத் தேர்தல் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,‘‘தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது. தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு நிச்சயம் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும். கடந்த மூன்று மாதங்களாக நான் அங்கு பிரசாரம் செய்ததில், மோடியின் குஜராத் முன்மாதிரி வளர்ச்சியின்மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக உணர முடிந்தது. பி.ஜே.பி. செய்த பிரசாரம், வியாபார தந்திரம் மிக்கதாக இருந்தது. ஆனால், அதன் உள்புறம் மிகப்பெரிய வெற்றிடம் காணப்பட்டது. குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி மீதான நம்பகத்தன்மையைத் தீவிர கேள்விக்குறியாக்கி இருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.