முன்னணி கொமடி நடிகரான யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘மெடிக்கல் மிராக்கல்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘A1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. ஜான்சன் தயாரித்து, இயக்கும் புதிய திரைப்படம் ‘மெடிக்கல் மிராக்கல்’. இதில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடிக்கிறார்.
இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி. எஸ். ஆர், நாஞ்சில் சம்பத், கே பி ஒய் பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எஸ். மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” முழு நீள அரசியல் நகைச்சுவை திரைப்படமாக ‘மெடிக்கல் மிராக்கல்’ உருவாகிறது.
நாயகன் யோகி பாபு வாடகை வாகனத்தை இயக்கும் சாரதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படபிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.” என்றார்.
யோகி பாபு கதையின் நாயகனாக நடிப்பதாலும், இயக்குநர் இயக்கிய இரண்டு படங்களும் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெற்றிருப்பதாலும் இவர்களின் கூட்டணியில் உருவாகும் ‘மெடிக்கல் மிராக்கல்’ படத்திற்கு திரையுலக ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.