பங்களாதேஷுக்கு எதிராக சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் 3 ஆம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (17) பகல் 12.40 மணியளவில் இலங்கை அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ வாபஸ் பெறப்பாட்டார்.
விஷ்வா பெர்னாண்டோவுக்கு முளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவர் அணியிலிருந்து வாபஸ் பெறப்பட்டு அவருக்குப் பதிலாக கசுன் ராஜித்த அணியில் சேர்க்கப்பட்டார்.
போட்டியின் 2 ஆம் நாளான நேற்று திங்கட்கிழமையன்று தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் ஷொரிபுல் இஸ்லாம் வீசிய பந்து விஷ்வா பெர்னாண்டோவின் ஹெல்மெட்டைப் பதம் பார்த்தது.
இதனை அடுத்து மூளை அதிர்ச்சிக்குள்ளான விஷ்வா பெர்னாண்டோ தற்காலிகமாக ஓய்வு பெற்று, மீண்டும் துடுப்பெடுத்தாடி 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
விஷ்வா தற்காலிக ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஏஞ்சலோ மெத்யூஸுடன் 9 ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார்.
இலங்கை அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்த பின்னர் பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடியபோது விஷ்வா ஆரம்ப ஓவரை வீசயதுடன் நேற்றைய தினம் 4 ஓவர்களை வீசினார்.
போட்டியின் 3 ஆம் நாளான இன்றைய தினம் மேலும் 4 ஓவர்களை வீசிய விஷ்வா அதன் பின்னர் பந்துவீசவில்லை.
அத்துடன் பகல்போசன இடைவேளையின்போது அவருக்கு மூளை அதிர்ச்சி உணரப்பட்டதால் உடனடியாக அணி முகாமைத்துவம் அவரை வாபஸ் பெற்றது.
இதனை அடுத்து மூளை அதிர்ச்சிக்கு மாற்று வீரராக கசுன் ராஜித்த அணியில் இணைக்கப்பட்டார்.
பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் விளையாட ஆரம்பித்த கசுன் ராஜித்த, 6 ஓவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட பின்னர் பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.
தனது முதலாவது ஓவரிலேயே விக்கெட் ஒன்றை கைப்பற்றிய ராஜித்த, சற்று நேரத்துக்கு முன்னர்வரை 5 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
இப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 397 ஒட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சற்று நேரத்துக்கு முன்னர் 3 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.