ஒரு பக்கம் உயிர்ப்பயம், இன்னொரு பக்கம் வாழ்வாதாரமின்மை என ஒவ்வொரு நாளையும் கண்ணீரில்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் கடத்திச்சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகி இருக்கிறது.
20 ஆண்டுகளாய் நடந்து வந்த ஆப்கானிஸ்தான் போர் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்து இருக்கிறது. அன்றைய தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டபோது, அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிய மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாய் ஆன பரிதாபம் நேர்ந்திருக்கிறது.
துப்பாக்கிகளை கைகளில் ஏந்திக்கொண்டு திரிகிற தலிபான் ஆளுகையில் நமது உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை என்று ஆப்கானிஸ்தானியர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள்.
அதனால்தான் அவர்கள் மூட்டை, முடிச்சுகளோடு, பிள்ளை குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானிய மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கே போவது, எப்படி போவது, எதில் போவது என எதிலும் திட்டமிடப்படாத கண்ணீர் வாழ்க்கை, அவர்களுக்கு சொந்தமாகி விட்டது.
அமெரிக்கா ஏற்கனவே 1 லட்சத்து 23 ஆயிரம் மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியதாக கணக்கு கூறியது. அவர்களில் எத்தனை பேர் ஆப்கானிஸ்தானியர்கள் என்ற புள்ளிவிவரம் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே 22 லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாய் குடியேறி இருக்கிறார்கள். இப்போது 35 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடைகள் போல ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு குடும்பம், குடும்பமாக நடந்து சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானிய அகதிகளை ஏற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறினாலும் ஸ்பின் போல்டாக் சாமன் எல்லை மூடப்படவில்லை என்கிறார்கள். ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் அந்த எல்லை வழியாக பாகிஸ்தானில் தஞ்சம் புகுகிறார்களாம். இதற்கு செயற்கைகோள் படங்களை ஆதாரமாக காட்டுகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நில எல்லைகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உரிய ஆவணங்களுடன் கூடிய வியாபாரிகளை மட்டுமே எல்லை தாண்டிச் செல்ல அனுமதிப்பதாக சொன்னாலும், ஆயிரமாயிரம் பேர் எந்த ஆவணமும் இன்றி உயிர்ப்பயத்தால் ஆப்கானிஸ்தானை விட்டு கடந்து செல்ல ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறார்கள் என தகவல்கள் சொல்கின்றன.
ஈரானும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது. தனது 3 மாகாணங்களில் அது அகதிகளுக்காக அவசர கால கூடாரங்களையும் அமைத்து தந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால், அகதிகள் திரும்பித்தாயகம் போய்விட வேண்டும் என்று கூறி அனுமதிக்கிறார்கள்.
ஏற்கனவே 35 லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள், ஈரானில்தான் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
தஜிகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஏற்கனவே அடைக்கலம் அடைந்துவிட்டனர். உஸ்பெகிஸ்தானிலும் சில ஆயிரம் அகதிகள் மறுவாழ்வு தேடிச்சென்றுள்ளனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி என பல நாடுகள் ஆப்கானிஸ்தானியர்களுக்கு தஞ்சம் தந்து வருகிறார்கள்.
இப்படி ஆப்கானிஸ்தானை விட்டு ஆயிரமாயிரம் மக்கள் உயிர்ப்பயத்தால் வெளியேறிக்கொண்டிருக்கிற நிலையில், அவர்களது எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழாமல் இல்லை.
ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்திக் கொண்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் முறைப்படி அங்கு தலிபான்கள் ஆட்சி அமைக்காதது பல கேள்விகளை எழுப்பி வருகிறது. நிச்சயமற்ற நிலையைக் காட்டுகிறது.
ஒரு பக்கம் உயிர்ப்பயம், இன்னொரு பக்கம் வாழ்வாதாரமின்மை என ஒவ்வொரு நாளையும் கண்ணீரில்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் கடத்திச்சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகி இருக்கிறது.
http://Facebook page / easy 24 news