எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு போட்டியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளது. முஸ்லிம் கூட்டமைப்புடன் கைகோர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் கூட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்கு மும்முரமாக செயற்பட்டுவருபவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; முஸ்லிம் கூட்டமைப்பொன்று கிழக்கில் உருவாகக் கூடாது என்றும் அதனை இல்லாமற் செய்ய வேண்டுமென்றும் பல்வேறு தரப்புகள் முயற்சி செய்து வருகின்றன.
இதன் பின்னணியில் பெரும் தேசிய கட்சிகளின் முகவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். முஸ்லிம் கூட்டமைப்பொன்று உருவானால் பெரும் தேசிய கட்சிகளுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாமற் போகும் என்ற பீதி அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் தமிழ் மக்கள் பிரிந்து வாக்களித்தாலும் அங்கு ஒரு தமிழர் முதலமைச்சராக பதவியேற்க முடியும்.
அவ்வாறான சூழ்நிலையே அங்கு நிலவுகிறது. கிழக்கில் நாம் பிரிந்து வாக்களித்தால் எம்மவர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியாது. அது அவர்களது உரிமை, அதனை நாம் பிழையாக பார்க்க முடியாது.
இதே உரிமை எமக்கும் உண்டு. ஆனால் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கிழக்கில் முதலமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படவேண்டுமென்பதை பெரும் தேசிய கட்சிகளின் உதவியுடனே தீர்மானிக்க வேண்டியுள்ளது.
எனவே முஸ்லிம்கள் நாம் ஒரு கூட்டமைப்பாக செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்படுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஒற்றுமைப்படுவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இருதரப்பும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாடுகளை எட்டவேண்டும். இந்த இலக்கை முஸ்லிம் கூட்டமைப்பு மையமாகக் கொண்டு செயற்படும். தமிழ் மக்கள் அரசியலில் தியாக மனப்பான்மையுடன் செயற்படுகிறார்கள்.
இந்த தியாக சிந்தனைகள் எமக்குள்ளும் உருவாக வேண்டும். எந்தவொரு அதிகாரத்தையும் எதிர்பார்த்து நான் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. எனக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படவில்லை.
அதனாலே முஸ்லிம் கூட்டமைப்பொன்றினை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என்று சிலர் தெரிவிக்கிறார்கள். இது தவறான கருத்தாகும். என்னை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விட்டிருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. பெரும் தேசியக் கட்சிகள் எமக்கான நிலைமையினையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
வடக்கில் தமிழ் மக்கள் பல்வேறு பிளவுகளுக்குள்ளும் ஒற்றுமைப்படுவது போன்று கிழக்கில் முஸ்லிம்கள் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இதுவே முஸ்லிம் கூட்டமைப்பின் இலக்காகும் என்றார்.