ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னம் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு பிரச்சினைக்குரியது எனவும், அதனை மாற்றினாலேயே அக்கட்சிக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுக்கும் எனவும் ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் தேர்தல் சின்னமும் மலர் மொட்டு ஆகும். இந்தியாவில் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களிக்க வில்லை. இதேபோன்றுதான், இந்த மலர் மொட்டு சின்னத்தையும் இந்நாட்டிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் நோக்குகின்றனர்.
தேர்தலின் போது நாட்டிலுள்ள சகல தரப்பினரையும் ஒரு கட்சி அனுசரித்தே செல்ல வேண்டும். அப்போதே தேர்தல் வெற்றி சாத்தியமாகும். கூட்டணி அமைப்பதாயின் கட்சியின் பெயர், சின்னம் என்பனவற்றை மாற்றுவதற்கு உடன்பட வேண்டும் எனவும் அவர் நிபந்தனைவிதித்தார்.
பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களை தேர்தல்காலம் வரும்போது ஊர்காய் போன்று தொட்டுக்கொள்வதற்கு சிலர் முயற்சிப்பது கவலையளிப்பதாகவும், அறிவு ரீதியாக சிந்தித்து முடிவு எடுக்கத் தெரியாதவர்களாக முஸ்லிம்களை சித்தரிக்க முயற்சிக்கும் விதத்திலும் முக்கிய அரசியல் கட்சிகள் செயற்படுவது குறித்தும் பல மட்டங்களிலும் விசனங்கள் எழுந்துள்ளன.