முஸ்லிம் தரப்புக்கும், பொதுபலசேனா நிபுணர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது, முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பொதுபலசேனா நிபுணர்கள் ஏற்றுக்கொண்டதாக,தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். இதுவரைகாலமும் வில்பத்துவை முஸ்லிம்களே நாசப்படுத்தி வந்துள்ளதாக நினைத்த, தங்களுக்கு எதிர்பார்த்த அளவில் போதிய விளக்கங்கள் கிடைத்திருக்கவில்லை எனவும் பொதுபலசேனா நிபுணர்கள் தெரிவித்ததாகவும் அசாத் சாலி தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
‘வில்பத்து சரணாலயம் அழிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறீர்கள். அது எங்கே இடம்பெற்றுள்ளது? வில்பத்து காடழிக்கப்பட்டு நாமல்கம உருவாக்கப்பட்ட போது நீங்கள் எங்கிருந்தீர்கள்? முஸ்லிம்கள் பூர்வீகக் குடிகளாக வசித்த நிலங்களையே நாம் வேண்டுகிறோம். அதுவல்லாமல் நாம் அரச காணிகளை கேட்கவில்லை’ என பல ஆக்கபூர்வமான வினாக்களை அங்கு தொடுத்ததாகவும் அஸாத்சாலி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்: ‘இப்பேச்சுவார்த்தையின் போது வில்பத்து விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வில்பத்துவில் முஸ்லிம்கள் காடுகள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு தொடர்பில், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் எஸ். நௌபல் அதன் உண்மை நிலவரம் குறித்து தெளிவானதொரு விளக்கம் அளித்தார். வில்பத்து தொடர்பில்
இதுவரைகாலமும் சுமத்தப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்களுக்கு நாம் வழங்கிய பதில்களை பொதுபல சேனா பிரதிநிதிகள் குழு ஏற்றுக்கொண்டது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.