முஸ்லிம்களின் புனித தலமான மதீனாவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்!
உலகளாவிய முஸ்லிம்களின் இரண்டாவது புனித தலமான மதீனா முனவ்வராவில் இன்றுமாலை தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் முதலாவது புனித தலமான மக்காவில் அமைந்திருக்கும் இறையில்லம் கஃபாவைப் போன்றே இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் இரண்டாவது புனித தலமாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் இன்று மாலை மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் ரமழான் நோன்பு நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பள்ளிவாசலின் சோதனைச்சாவடி அருகே தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளேயிருப்பவர்கள் வெளியே செல்லவோ, வெளியிலிருந்து யாரும் உள்ளே பிரவேசிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பள்ளிவாசலைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், செய்தித் தணிக்கையும் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.