முள்ளிவாய்க்காலில் வெளிக்கிளம்பிய ஆயுத தளபாடங்கள் யாருடையவை?
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட ஆயுத தளபாடங்கள் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றது.
அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடைபெற்ற பகுதிகளில் குடியேறியுள்ள குடும்பம் ஒன்றின் காணியில் கிணறு வெட்டும் போது சில இராணுவ தளபாடங்கள் வெளிக்கிளம்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
இராணுவ அடையாளங்களுடன் கணப்படும் மேற்படி தளபாடங்கள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டவையா? அல்லது விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டவையா? என்பது தெரியாதுள்ளது.
இந்த இராணுவ தளபாடங்கள் ஆபத்தை விளைவிக்காதவை என்றாலும்; சுமார் 10 அடி ஆளத்தில் இருந்துள்ளமையானது, இங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் பூமிக்கு அடியில் இது போன்ற இன்னும் பல மர்மங்கள் புதைந்திருக்கக் கூடுமெனவும் அதன் ஆபத்தை தங்களால் அறியமுடியாது என்றும் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இறுதி யுத்தத்தின் போது நிலத்திற்கு அடியில் விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் பலவற்றை புதைத்ததாகவும் ஆனால் அவற்றை மீளெடுத்தார்களா? என்பது தமக்கு தெரியாது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.