”இன்புளுவன்சா ஏ, பி வகை கிருமித்தொற்றுக் காரணமாகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நிமோனியா சார்ந்த காய்ச்சலின்போதே இந்தக் கிருமிகள் தொற்றுகின்றன.”
– இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.சுவாசத்தின்போதே இந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தாம் கருதுகின்றார் எனவும் அவர் கூறினார்.
அடையாளம் தெரியாத காய்ச்சலால் முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பு தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு மற்றும் தொற்று ஆய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அவர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் ஆய்வின் பின்னர், இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் வைரஸ் இன்புளுவன்சா ஏ, பி வகை கிருமித்தொற்று என்று கண்டறியப்பட்டுள்ளது. இது அச்சம் கொள்ளக்கூடிய வகையிலான மர்மக் காய்ச்சல் என நாம் உடனடியாக முடிவுக்கு வரமுடியாது.
இவ்வாறான தொற்றுகள் நிமோனியா சார்ந்த காய்ச்சலின்போதே ஏற்படும். அதிலும் சுவாசம் சார்ந்த கிருமித் தாக்கமாக இது இருக்கும். இதனால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்ப முடிவுகளின்படி நாம் அறிந்துள்ளோம். இதுவரை இந்தக் காய்ச்சலால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை வசதிகள் கூடிய யாழ்ப்பாணம், அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
முல்லைத்தீவில் இவ்வாறான சிகிச்சை பெற்று வருபவர்களைத் தனியானதொரு பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு அபாயகரமான நிலைமை எதுவும் இல்லை.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குருதி மாதிரிகள் பரிசோதனைகளுக்காக ஏற்கனவே கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” – என்றார்.