முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களுடைய காணியில் ஒரு துண்டுக் காணியைக் கூட கோத்தபாய முகாம் அமைத்துள்ள கடற்படைக்கு வழங்க முடியாது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்த விடயம் தொடர்பில் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகலில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ளது.
அந்தக் காணிகளைக் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் எதிர்ப்பால் அவை பயனளிக்கவில்லை.கடந்த வியாழக்கிழமையும் காணி அளவீடு செய்யப்படும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்திருந்தது. காணி சுவீகரிப்பைக் கைவிடுமாறு கோரி பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் முகாமுக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் வேறு வழியூடாக நில அளவையாளர்கள் கடற்படை முகாமுக்குள் சென்றனர். அவர்கள் வெளியேற வேண்டும், நில அளவீட்டை நிறுத்த வேண்டும் எனக் கோரி வட்டுவாகல் பாலத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நில அளவை கைவிடப்படுகின்றது என்றும், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் எனவும் எழுத்து மூலமாக தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்த விடயங்களை உள்ளடக்கி கரைத்துறைப்பற்று பிரதேச செயலரின் கையொப்பத்துடனான கடிதத்தை மாவட்ட மேலதிக செயலர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கையளித்தார். மக்கள் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர்.
நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் ஆராயப்பட்டது. அந்தக் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.