மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது பேருந்து மோதியதில் மூன்று வாகனங்களும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது, இதில் 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் சொகுசு பேருந்து ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் சதாரா நகரில் இருந்து மும்பைக்கு கிளம்பியது. பேருந்து இன்று காலை மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த இன்னோவா மற்றும் ஸ்விப்ட் கார்கள் மீது பயங்கரமாக மோதி மூன்று வாகனங்களும் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 10 பெண்கள், 6 ஆண்கள், 6 மாத குழந்தை என மொத்தம் 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.