மும்பை நகரில், அரசுக்கு சொந்தமான வங்கியின் கீழே, நான்கு மாதங்களாக, 25 அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், கொள்ளை அடிக்கப்பட்டவற்றின் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை.
வங்கிக்கு பக்கத்தில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அங்கு மளிகைக்கடை ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேகத்திற்குறிய திருடர்களை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை.இத்தனை மாதங்களாக, சந்தேகம் ஏற்படாத வகையில், இவர்கள் எப்படி இந்த சுரங்கத்தை தோண்டினார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
வங்கியில் களவாடப்பட்ட பாதுகாப்பு வைப்பு பெட்டிகளை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களிடம் இந்திய ஊடகங்கள் பேசியுள்ளன.
மும்பை மிரர் பத்திரிக்கையிடம் பேசிய டக்து கவானி,”என்னுடைய வாழ்நாள் சேமிப்பு அனைத்தும் இந்த பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. பல தலைமுறைகளாக நாங்கள் வைத்திருந்த நகைகள் எல்லாம் தற்போது காணாமல் போயுள்ளன” என்று தெரிவித்தார்.
திங்கட்கிழமை காலை, திருட்டு நடந்துள்ளதை கண்டறிந்த வங்கி பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.வங்கியில் உள்ள 225 பாதுகாப்பு பெட்டகங்களில், 30 பெட்டிகளில் திருட்டு நடந்துள்ளதாக காவல்துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இந்த திருட்டு தொடர்பாக சந்தேகத்திற்குரியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை