முன்னாள் போராளிகள் பீதியில் இராணுவ வீரர்கள் சலுகையில்..
கடந்த ஆட்சி பகிரங்கமான அடக்கு முறை, தமிழ் மக்கள் மீதாக தாக்குதல் போன்ற வற்றில் ஈடுபட்டது. அதே போல் தற்போதைய ஆட்சியும் நல்லிணக்கம் எனும் போர்வையில் பக்க சார்புகளையும் மறைமுக அடக்கு முறை செயற்பாடுகளை செய்து வருகின்றதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த விடுதலைப் புலிகளோடு நடந்த போரில் இறந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் தலா 35,000 ரூபா அரசினால் வழங்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே சமயம் அங்கவீனர்களுக்கான நிவாரணங்களும் முறையாக வழங்கப்படுகின்றது.
இதன் போது அவர்களுக்கு 55 வயது கடந்துவிட்டது என்றால், கொடுப்பனவு 25,000 ரூபாவாக குறைக்கப்படுவதாகவும். அவ்வாறு குறைக்கப்படக்கூடாது பழைய கொடுப்பனவே கொடுக்கப்பட வேண்டும் எனவும் அரசிற்கு இராணுவ வீரர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டிற்காக போராடிய இராணுவத்தினருக்கு கொடுப்பனவுகள் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் தான். அது எந்த வகையிலும் பிழையாகாது.
அதேவேளை புனர்வாழ்வு அழிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? தற்போதும் அவர்களை பயங்கர வாதிகளாகவே சித்தரிக்கப்படும் தன்மையுமே நாட்டில் காணப்படுகின்றது.
ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் முன்னாள் போராளிகளின் அதே நிலைதான் அவர்களின் குடும்பத்தாருக்கும்.
இதேவேளை அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்த வரை முன்னேற்றவில்லை. வாழ்வாதார பிரச்சினை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது அதே போல் அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அன்றாடம் அவதானிக்கப்படும் ஒன்றே.
முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் விசாரணை செய்யப்படுகின்றது என்று எடுத்து கொண்டாலும் தற்போது வரை,
கைப்பற்றப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவில்லை, தொடர்ந்தும் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, விடுதலையான போராளிகளுக்கு அச்சுறுத்தல், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, விதவை பெண்களின் அவல நிலை, இராணுவ அடக்கு முறை போன்ற பல பிரச்சினைகளுக்கு முடிவு இல்லை.
கைது செய்யப்பட்டவர்கள் தண்டனைக்காலம் எனும் ரீதியில் பார்க்கப்போனாலும் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் வடக்கு கிழக்கில் இராணுவத் தலையீட்டிலேயே இன்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறான பல பிரச்சினைகள் வடக்கு கிழக்கில் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
மேலும் அபிவிருத்தி நல்லிணக்கம் என்று அரசு கூறிக்கொண்டு வந்தாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தற்போதும் இராணுவ அடக்கு முறையே தொடர்ந்து கொண்டு வருகின்றதனை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.
பொறுப்பு வாய்ந்த அரசு என்று பார்க்கும் போது முறையான பக்க சார்பு அற்ற ஆட்சி முறைகள் தேவை, அப்போதே ஒற்றுமை மிக்க நல்லிணக்கம் மிக்க நாடாக இலங்கை மாறும் என்பது நிச்சயம் என தெரிவிக்கப்படுகின்றது