மது போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிமல் தம்புவசம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட முன்னாள் நீதிபதியை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் நீதிபதி தம்புத்தேகம பிரதேசத்தில் நேற்று நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்டதன் பின் வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது, பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது, வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற அவரது மகள் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை அடுத்து முன்னாள் நீதிபதி ஓட்டிச் சென்ற வாகனமும் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் முன்னாள் நீதிபதியும், அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர்.
வாரியபொல பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.