இலங்கை – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.
ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து உரிய வெற்றி இலக்கை அடைந்தது.
முன்னாள் அணித் தலைவர்கள் ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் மத்திய வரிசையில் திறமையாக துடுப்பெடுத்தாடியதன் பலனாக இலங்கை வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரக்கெட் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.
சுமார் 3 வருடங்களின் பின்னர் ரி20 அணியில் இடம்பிடித்த ஏஞ்சலோ மெத்யூஸ் அனுபவசாலிக்கே உரித்தான பாணியில் துடுப்பெடுத்தாடி இலங்கையை வெற்றி அடையச் செய்து ஆட்ட நாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.
14 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று தோல்வியின் விளிம்பில் இலங்கை இருந்தபோது ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸும் தசுன் ஷானக்கவும் 7ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 6 ஓட்டங்களே தேவைப்பட்டபோது ஏஞ்சலோ மெத்யூஸ், சிக்ஸ் மூலம் வெற்றி ஓட்டங்களைப் பெற முயற்சித்து ஆட்டம் இழந்ததால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அடுத்து களம் நுழைந்த துஷ்மன்த சமீர் கடைசி 2 பந்துகளில் 4, 2 என 6 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மெத்யூஸ் பின்னர் அதிரடியில் இறங்கி 38 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 46 ஓட்டங்கைளப் பெற்றார்.
தசுன் ஷானக்க 18 பந்துகளில் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
பெத்தும் நிஸ்ஸன்க (2) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.
குசல் மெண்டிஸ் (17), குசல் ஜனித் பெரேரா (17) ஆகிய இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் களம் விட்டகன்றனர்.
தொடர்ந்து சதீர சமரவிக்ரம 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
சரித் அசலன்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திரந்தபோது சரித் அசலன்க (16) கவனக் குறைவான அடி காரணமாக நடையைக் கட்டினார்.
ரி20 அணிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வனிந்து ஹசரங்கவும் இந்தப் போட்டி சிறப்பாக அமையவில்லை. அவர் இரண்டாவது பந்தில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
ஆனால், அதன் பின்னர் மெத்யூஸும் தசுன் ஷானக்கவும் ஆட்டத்தின் பிடியை இலங்கை பக்கம் திருப்பி வெற்றிக்கு அடிகோலினர்.
பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர்களான டினாஷே கமுன்ஹுகம்வே (26 ஓட்டங்கள்), க்ரெய்க் ஏர்வின் (10) ஆகிய இருவரும் 31 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியசத்தில் 6ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தனர்.
அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா மிக வேகமாகத் துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களைக் குவித்தார்.
முன்னாள் அணித் தலைவர் சோன் வில்லியம்ஸுடன் 3ஆவது விக்கெட்டில் சிக்கந்தர் ராஸா பகிர்ந்த 48 ஓட்டங்களே ஸிம்பாப்வே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக பதிவானது.
உபாதையிலிருந்து மீண்டுவந்த சோன் வில்லியம்ஸ் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
ரெயான் பேர்ல் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
ப்றயன் பெனெட் 10 ஓட்டங்களுடனும் லூக் ஜொங்வே 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பும் வேகப்பந்தவீச்சும் சிறப்பாக அமையவில்லை.
காய்ச்சலில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய பெத்தும் நிஸ்ஸங்க இரண்டு பிடிகளைத் தவறவிட்டதுடன் வேகப்பந்துவீச்சாளர்களான நுவன் துஷார (43 ஓட்டங்கள்), துஷ்மன்த சமீர (38) ஆகிய இருவரும் மொத்தமாக 81 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தனர்.
மஹீஷ் தீக்ஷன 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.