உலகின் முன்னாள் மென்பார குத்துச்சண்டை சம்பியன் அமீர் கான், அனைத்து வகையான விளையாட்டுகளிலும் பங்குபற்றுவதற்கு 2 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியமையே இதற்கான காரணம்.
பிரித்தானியரான 36 வயதான அமீர் கான், 2009 முதல் 2012 வரையான காலத்தில் லைட் வெல்ட்டர்வெய்ட் பிரிவில் பல உலக சம்பியன் பட்டங்களைப் பெற்றிருந்தார். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றார். கடந்த வருடம் அவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
2002 பெப்ரவரி மாதம் மன்செஸ்டரில் நடைபெற்ற போட்டியின் பின்னர் அவரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் சோதனை நடத்தியபோது, அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியமை தெரியவந்தது.
2022 ஏப்ரல் முதல் அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவருக்கு அனைத்து விளையாட்டுக்களிலும் 2 வருட தடை விதிக்கப்படுவதாக பிரித்தானிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் இன்று தெரிவித்துள்ளது.
2022 ஏப்ரலிலிருந்து இத்தடை அமுலுக்கு வருவதாகவும் 2024 ஏப்ரல் 5 ஆம் திகதி இத்தடை முடிவடையவுள்ளதாகவும் அம்முகவகரம் தெரிவித்துள்ளது.
தான் வேண்டுமென்றே இந்த ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அமீர் கான் கூறுகிறார். அந்த வாதத்தை சுயாதீன விசாரணைக்குழு ஏற்றுக்கொண்டிருந்தது.
இத்தடை குறித்து அமீர் கான் கருத்துத் தெரிவிக்கையில், ‘நான் ஒருபோதும் மோசடி செய்ய மாட்டேன். நான் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு 2 வருட தடை விதித்துள்ளமை வேடிக்கையானது. மீண்டும் போட்டிகளுக்குத் திரும்பும் திட்டம் எதுவும் என்னிடமில்லை’ எனக் கூறியுள்ளார்.