தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக, வான் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நீதிமன்ற அனுமதியுடன் முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சனின் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, வெடிபொருள்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தர்மபுரம் 7ஆம் யுனிற் பகுதியிலுள்ள முன்னாள் போராளியின் வீட்டுக்கு, சிறப்பு அதிரடிப்படையினர், வான் படையினர், பொலிஸார், நீதிமன்றப் பணியாளர்கள், கிராம அலுவலர்கள் நேற்றுக் காலை சென்றனர். அவர்கள் முன்னிலையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
நிலமட்டத்திலிருந்து 6 அடி ஆழத்தில் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட பெட்டி ஒன்று மீட்கப்பட்டது. அதனைத் திறந்து பார்த்தபோது, வெடிபொருள்களை அடையாளம் காட்டும் கருவி, கைத்துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் என்பன இருந்துள்ளன. அவற்றைப் பொலிஸார் மீட்டெடுத்தனர்.2014ஆம் ஆண்டு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து புலிகளின் மீள் எழுச்சி என்று கூறப்பட்டு அப்பன், கோபி, தேவியன் மூவர் ராணுவத்தினராலும் பொலிஸாராலும் தேடப்பட்டனர். இறுதியில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டு விவகாரத்தில் முன்னாள் போரளியான ரஞ்சன் தேடப்பட்டு வந்திருந்தார் என்றும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.