முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக, எதிர்வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளும் போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி கூறினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு மகாலில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில தலைவர் தெகலான்பாகவி நிருபர்களிடம் கூறியதாவது:தலை நாக்கிற்கு விலை நிர்ணயிக்கும் வன்முறை அரசியலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வைரமுத்துவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.10 கோடி வழங்க தயார் என்று தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக அறிவித்துள்ளார். வடஇந்தியாவில் மட்டுமே இதுபோன்ற தலை, நாக்கு போன்றவற்றிற்கு பரிசுகள் அறிவிப்பு வெளியாகி வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்தும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாவது கவலையை ஏற்படுத்துகிறது.
அதோடு, வருங்காலத்தில் இந்துகளைப் பழித்துப் பேசுபவர்களைக் கொலை செய்யவும் தயாராக வேண்டும் என்றும் முழுக்க முழுக்க வன்முறை விதைகளை தூவும் வகையில் அவருடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன. ஆகவே, தமிழக அரசு இதுபோன்ற வன்முறைகளை ஏவிவிடும் தலைவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே, எச்.ராஜா போன்றவர்கள் மதவாத அரசியலுக்காக வன்முறை பேச்சுக்களை பேசிவந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன் அவர்களின் பேச்சும் தமிழகத்தின் அமைதிக்கு கேடுவிளைவிக்கும் என்பதை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வைரமுத்து அவர்கள் ஆண்டாள் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிறகும், அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதும், தலை, நாக்கு போன்றவற்றிற்கு விலை நிர்ணயிப்பதுமான வடநாட்டு இந்துத்துவா வன்முறை அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வசதிக்கேற்ற கட்டணம் என்ற அடிப்படையில் ரயில்களில் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய, கட்டண மறு ஆய்வு கமிட்டியை ரயில்வே வாரியம் அமைத்தது. இந்த கமிட்டி மாறுபட்ட கட்டண முறையை அமல்படுத்தலாம் என ரயில்வே வாரியத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. அதன்படி அதிகமான மக்கள் பயணம் செய்யும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் லோயர் பெர்த் படுக்கைகளுக்குக் கட்டணத்தை உயர்த்தவும், பண்டிகை காலங்களில் கட்டணத்தை அதிகரிக்கவும், உணவு வசதிகொண்ட ரயில்களில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கவும் பரிந்துரைத்துள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே, பண்டிகை காலங்களில் விடப்படும் சுவிதா சிறப்பு ரயிலில் விமானக்கட்டணத்தை விட அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் கட்டண மறு ஆய்வு கமிட்டியின் பரிந்துரையானது, ரயில் பயணத்தை, அதன் வசதிகளையும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்கிவிடும்.
பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவரும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தற்பொது மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே போக்குவரத்தை ஏழைகள், நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாத வகையில், வெறும் லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதனை கார்ப்பரேட் மயமாக்கி வருகிறது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிர்களைக் காக்க, காவிரியில் 15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென்றும், அதனைச் செயல்படுத்துமாறு கர்நாடக அரசை மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில், வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிக்கிறது.
முஸ்லிம் விரோத போக்குடன், மத்திய பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக, எதிர்வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளும் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட மாட்டாது எனவும், அந்த நிதி சிறுபான்மை பெண்களுக்கு கல்வி அளிக்க பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு மூலம் புதிய சர்ச்சையை உருவாக்கி, அதன் மூலம் மத்திய அரசின் நிர்வாக கோளாறால் நாடு சந்தித்துள்ள சீரழிவை மக்களிடமிருந்து மறைக்கவும், இந்தியாவின் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பிரச்சனையை மறைப்பதற்குமான சதித்திட்டமே இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ளது.
ஏனெனில், ஹஜ் மானியம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கூட 2022க்குள் ஹஜ் மானியத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் என கூறும் நிலையில், அவசர அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணியில் அரசுக்கு ஏற்பட்டுள்ள் நெருக்கடியை மறைக்கும் போக்கும், கூடவே அதன் வழக்கமான முஸ்லிம் விரோதப் போக்கும் உள்ளதை அறிய முடிகிறது.
ஹஜ் மானியம் என்பது அது யாத்திரிக்கர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்படுவது இல்லை. மாறாக, அது ஹஜ் மாதங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தில் இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கப்படும் கட்டணத்திற்கு வழங்கப்படும் சலுகையே. அதாவது சாதாரண காலங்களில் ரூ.30 ஆயிரமாக இருக்கும் விமானக் கட்டணம், ஹஜ் காலங்களில் லாப நோக்கில் ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதனால் பல ஆயிரம் கோடி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கிறது. அந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே மானியம் என்ற பெயரில் சலுகையாக வழங்கப்படுகிறது. இதனால், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தான் லாபம் அடைகிறதே தவிர, ஹஜ் பயனாளிகள் எந்த நன்மையும் அடைவதில்லை.
ஹஜ் மானியம் தொடர்பாக தற்போது நடக்கும் விவாதங்கள் மக்களின் மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் ஒரு ஏமாற்று வேலையாகும். மதசார்பற்ற நாட்டின் ஆன்மீக பயணத்திற்கு மானியமா? என்ற கேள்வியை முன்வைக்கும் இந்துத்துவா அமைப்புகள், ஆண்டுதோறும் அமர்நாத் மற்றும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைகளுக்கு செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடையும், நாட்டில் நடைபெறும் கும்பமேளாக்களுக்கு அரசு சார்பாக செலவிடப்படும் கோடிக்கணக்கான நிதிகளையும் அவர்கள் ஆன்மீகத்திற்கான நிதி ஒதுக்கீடாக கணக்கில்கொள்வதில்லை. மாறாக, மானியம் என்ற பெயரில் பொதுத்துறை விமான நிறுவனத்துக்கு வழங்கப்படும் கட்டண சலுகையை மட்டும் தூக்கிப்பிடிப்பது என்பது முஸ்லிம் விரோத போக்காகும்.
ஹஜ் மானியம் என்ற பெயரில் வழங்கி வந்த கட்டண சலுகையை திரும்பப்பெறும் மத்திய அரசு, அனைத்து விதமான புனித யாத்திரைகளுக்கும் வழங்கப்படும் மானியங்களையும், நிதி ஒதுக்கீடையும் ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்ய மத்திய பாஜக அரசு முன்வருமா? புனித யாத்திரைக்கும், ஆன்மீக நிகழ்வுகளுக்கு அரசு நிதி, மானியம் வழங்கப்படாது என்ற முடிவுக்கு அரசு முன்வருமா? அவ்வாறு முன்வருமானால் அரசின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால், அரசியலுக்காக மதவாதத்தை முன்னிலைப்படுத்தும் பாஜக அரசு அதற்கு ஒருபோதும் தயாரில்லை.உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். அப்படி நடத்தும் பட்சத்தில் நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, அச.உமர் பாரூக், ரத்தினம் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஷஃபியுல்லா, பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.