முதல் ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே 168 ரன்களுக்கு சுருண்டது
ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை முதலில் பேட் செய்ய அழைத்து 168 ரன்களுக்குச் சுருட்டியது.
டாஸ் வென்ற தோனி முதலில் ஜிம்பாப்வேயை பேட் செய்ய அழைத்தார். புதிய பிட்சாக இருப்பதால் தொடக்கத்தில் பவுலர்களுக்கு உதவியிருக்கும் என்ற எண்ணத்தில் தோனியின் முடிவு சரியாகவே அமைந்தது.
ஜிம்பாப்வே அணியில் சிபாபா, மசகாட்சா, கிரெய்க் எர்வின், சிகந்தர் ரசா, சிகும்பரா (அதிகபட்சமாக 41 ரன்கள்), முதும்பாமி ஆகியோர் இரட்டை இலக்கங்களைக் கடந்தனர். சுமார் 6 வீரர்கள் இரட்டை இலக்கம் கடந்துள்ளனர் என்றால் இவர்கள் கொஞ்சம் நிதானித்து ஆடியிருந்தால் நிச்சயம் ஸ்கோர் 168 ரன்களுக்கும் அதிகமாகவே அடித்திருக்க வேண்டும். இந்தப் பிட்சில் குறைந்தது 250 ரன்கள் இருந்தால் துரத்தும் அணிக்கு சவால் ஏற்படுத்தலாம்.
இந்தியப் பந்து வீச்சு அசாதாரணமாக இருந்தது என்று கூற முடியாவிட்டாலும், கட்டுக்கோப்புடன் அமைந்தது. லெக் பிரேக் பவுலர், அறிமுக வீரர் யஜுவேந்திர சாஹலுக்கு அருமையான அறிமுகப் போட்டியாக அமைந்தது, அவர் பந்துகள் நன்றாகத் திரும்பின. பொதுவாக லெக்ஸ்பின்னர்கள் மோசமாக வீசும்போது விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார்கள், ஆனால் சாஹல் நன்றாக வீசியும் 10 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைத்தான் கைப்பற்றினார். இவரது பந்துகள் அவ்வப்போது எட்ஜ் ஆகி ஸ்லிப்பிற்கு சென்றது, அங்கு ராகுல் சரியாக இல்லை. தொடக்கத்தில் ஒரு கேட்சை விட்டதோடு, முன்னால் பிட்ச் ஆகும் பந்து ஒன்றை பவுண்டரியாக்கினார், இதுவும் சாஹலின் ஓவரில்தான் நடந்தது.
தொடக்கத்தில் பரீந்தர் சரண் அருமையாக இருபுறமும் ஸ்விங் செய்தார். ஜஸ்பிரீத் பும்ரா இன்றைய சிறந்த வீச்சாளர் இவர் 4 விக்கெட்டுகளை 28 ரன்களுக்குக் கைப்பற்றினார், இவருக்கு கூடுதல் பவுன்ஸ் கிட்டியது. வேகம் குறைவான பந்துகளையும் அளவு மாற்றி அபாரமாக வீசியதோடு யார்க்கர்களும் அவருக்கு சிறப்பாக கைகூடின. தவல் குல்கர்னி மசாகாட்சாவை தடுமாறச் செய்து கடைசியில் வீழ்த்தினார். அக்சர் படேல் தனது 10 ஓவர்களை விறுவிறுவென்று வீசி 26 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், விக்கெட் கைப்பற்றிய பந்து பயங்கர ஷாட் பிட்ச் பந்து அதனை எர்வின் வாரிக்கொண்டு அடித்தார், ஆனால் அது நீளமான பவுண்டரி, சூரிய வெளிச்சம் மறைத்த போதிலும் கடினமான கேட்சை பதிலி வீரர் ஃபாசல் எளிதில் பிடித்தது போல் தெரிந்தது.
சிகும்பரா (41), எர்வின் (21) ஆகியோர் போராடிப் பார்த்தனர், ஆனால் இந்தியப் பந்து வீச்சு கட்டுக்கோப்புடன் அமைந்ததால் பெரிதாக ஒன்றும் ஆட முடியவில்லை. சிகந்தர் ரசாவும் 23 ரன்களுக்குப் போராடிப் பார்த்தார், ஆனால அவர் சரண் பந்தில் பவுல்டு ஆனார். 168 ரன்களில் மொத்தம் 9 பவுண்டரிகளையே அடிக்க முடிந்தது. இதில் குல்கர்னி, சரண் கொடுத்தது தலா 3 பவுண்டரிகள். பும்ரா, படேல், சாஹல் ஆகியோர் தங்களது 10 ஓவர்களும் சேர்த்தே 3 பவுண்டரிகளையே விட்டுக் கொடுத்தனர்.
இந்திய அணியில் லோகேஷ் ராகுல், கருண் நாயர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளனர்.