முதல்வர் ஜெயாவுக்கு செயற்கை சுவாசம் : அப்பலோவின் உண்மை அறிக்கை
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறிவந்த நிலையில் தற்போது நோய் தொற்று சிகிச்சை, அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது பற்றி 13 நாட்களுக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு, அங்கு நடந்த பரிசோதனைகளின் முடிவில் நுரையீரலில் நோய்த்தொற்று அதிகமாகி மூச்சுவிட சிரமப்படுவதாக தகவல் வெளியானது.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், அதை அறிக்கையாக வெளியிட்டது. அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து சிறப்பு மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சையளிக்கவே, காய்ச்சல் குணமாகி, உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீரானது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 13 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக அடிக்கடி ஊடகங்களுக்கு அறிக்கை வெளிவருகிறது. 23, 24ஆம் தேதிகளில் அப்பல்லோ அனுப்பிய ஊடகக் குறிப்புகளில் முதல்வர் வழக்கமாக உண்ணும் உணவுகளை உட்கொள்கிறார் என்று கூறப்பட்டது. 02-10-2016 என்று வெளியிட்ட அறிக்கையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலின் கண்காணிப்பில் முதல்வர் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.