முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்!
இதுதொடர்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயல்பாட்டு அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகிறது.
முதல்வருக்கு உயர் சிகிச்சை அளிக்கும் பொருட்டு சர்வதேச மருத்துவ நிபுணரின் ஆலோசனையையும் பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்து, அதன்படி லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே கடந்த செப்டம்பர் 30ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.
டாக்டர் பீலே, முதல்வரின் உடல்நிலையைப் பரிசோதித்துப் பார்த்து உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். மேலும் முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அதன் அடிப்படையில், முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் அவர் நீண்ட ஆலோசனை மேற்கொண்டார்.
நோய்த் தொற்றுக்கு சிகிச்சை: அந்த ஆலோசனையின் அடிப்படையில் முதல்வருக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கு இப்போது அளிக்கப்பட்டு வரும் “ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும், உரிய சிகிச்சை முறைகளையும் தொடரலாம் என அவர் ஆலோசனை வழங்கினார்.
அதன்படி, இந்த சிகிச்சைகளால் முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் மேலும் சில நாள்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அப்பல்லோ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக அமைச்சர்கள், அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அப்பல்லோ மருத்துவமனை வந்திருந்தனர்.
முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார். மருத்துவமனையில் இருந்தவாறே அரசு பணிகளை கவனித்து வருகிறார்’ என முன்னாள் அமைச்சர் பொன்னையன் அப்போது தெரிவித்தார்.