இந்த ஆண்டிற்கான உலகளவில் பிரபலமான இந்திய நட்சத்திரம் யார்? என்பதற்கான பட்டியலை சர்வதேச அளவில் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி தனியார் இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த ‘ஸ்லிம் சிவாஜி’ நடிகர் தனுஷ் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
ஐ எம் டி பி எனப்படும் சர்வதேச அளவிலான அனைத்து மொழி திரைப்படங்களையும், நட்சத்திரங்களையும், தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளம், ஆண்டுதோறும் திரை உலகை ஆர்வலர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும் பாராட்டைப் பெற்ற நட்சத்திரங்களையும், திரைப்படங்களையும் பட்டியலாக வெளியிடும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த நட்சத்திரங்களின் பட்டியலை அந்த இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதில் முதலிடத்தில் நடிகர் தனுசும், இரண்டாம் இடத்தில் பொலிவுட் நடிகை ஆலியா பட்டும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் மூன்றாம் இடத்தில் ஐஸ்வர்யா ராயும், நான்காமிடத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் ராம்சரண் தேஜா, ஐந்தாமிடத்தில் ‘யசோதா’ சமந்தா, ஆறாமிடத்தில் பொலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஏழாமிடத்தில் பொலிவுட் நடிகை கைரா அத்வானி, எட்டாமிடத்தில் ஜூனியர் என்டிஆர், ஒன்பதாமிடத்தில் ‘புஷ்பா’ புகழ் அல்லு அர்ஜுன், பத்தாமிடத்தில் ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகர் யஷ் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதனிடையே இந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் ‘மாறன்’, ‘தி கிரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ ஆகிய நான்கு படங்கள் வெளியானது என்பதும், இதில் ‘திருச்சிற்றம்பலம்’ வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெற்றது என்பதும், இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரமாக தனுஷ் தெரிவு செய்யப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.