கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள 200 மீற்றர் சுற்றுவட்டத்தைக் கொண்ட ஓடுபாதையில் ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத்தினால் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) முதல் தடவையாக நடத்தப்பட்ட தேசிய குறுந்தூர ஓடுபாதை மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 60 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் ஸ்ரீலக் அத்லெட்டிக் கழக வீரர் கவீஷ பண்டார அதிசிறந்த நேரப் பெறுதியை பதிவுசெய்தார்.

60 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 7.85 செக்கன்களில் ஓடி முடித்தே இலங்கைக்கான அதிசிறந்த நேரப் பெறுதியை கவீஷ பண்டார பதிவுசெய்தார்.
ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியை இராணுவக் கழக வீரர் சமோத் யோதசிங்க 6.63 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்றார்.

இந்தப் போட்டி நிகழ்ச்சி வரலாற்றில் சமோத் யோதசிங்க பதிவுசெய்த இரண்டாவது அதிசிறந்த நேரப்பெறுதி இதுவாகும்.

இதேவேளை, பெண்களுக்கான 1500 மீற்றர் (4:53.93 நிமிடம்), 3000 மீற்றர் (11:09.75 நிமிடம்) ஆகிய இரண்டு போட்டிகளிலும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த துலஞ்சனா ப்ரதீபனி முதலாம் இடங்களைப் பெற்று அசத்தினார்.