இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது.
இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 – 2025 சுழற்சிக்கான தனது முதலாவது வெற்றிப் புள்ளிகளைப் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது.
இந்த டெஸ்ட் போட்டியின்மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக ஆரம்பிப்போம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன போட்டிக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தபோதிலும் இலங்கைக்கு ஏமாற்றமே கிடைத்தது.
அப் போட்டியில் 131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் கடும் சவாலை எதிர்கொண்டு 6 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
போட்டியின் நான்காம் நாளான புதன்கிழமை (19) கடைசிக் கட்ட ஆட்ட நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியில் வெற்றிபெறுவதற்கு மேலும் 83 ஓட்டங்களைப் பெறவெண்டிய நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை இன்று காலை தொடர்ந்த பாகிஸ்தான் மேலும் 3 விக்கெட்களை இழந்தது.
ப்ரபாத் ஜயசூரய திறமையாக பந்துவிசி பாகிஸ்தான் அணியினருக்கு பெரும் சோதனையைக் கொடுத்தார்.
எனினும் மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இமாம் உல் ஹக் அரைச் சதம் குவித்து பாகிஸ்தான் வெற்றிபெற உதவினார்.
பாகிஸ்தான் தொடர்ந்து துடுப்பெடுத்தாடியபோது பாபர் அஸாம் 24 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் இழக்க, போட்டியில் இலங்கை திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் எழுந்தது.
ஆனால், இமாம் உல் ஹக், முதலாவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த சவ்த் ஷக்கீல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.
ஷக்கீல் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து சவ்ராஸ் அஹ்மத் 6ஆவதாக ஆட்டம் இழந்தார். ஆனால், அடுத்து களம் புகுந்த மற்றொரு முதல் இன்னிங்ஸ் ஹீரோ அகா சல்மான், முதல் பந்திலேயே சிக்ஸ் விளாசி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
இலங்கை 1ஆவது இன்: 312 (தனஞ்சய டி சில்வா 122, ஏஞ்சலோ மெத்யூஸ் 64, சதீர சமரவிக்ரம 36, அப்ரார் அஹ்மத் 68 – 3 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 86 – 3 விக்., நசீம் ஷா 90 – 3 விக்.)
பாகிஸ்தான் 1ஆவது இன்: 461 (சவ்த் ஷக்கீல் 208 ஆ.இ., அகா சல்மான் 83, ஷான் மசூத் 39, ரமேஷ் மெண்டிஸ் 136 – 5 விக்., ப்ரபாத் ஜயசூரிய 145 – 3 விக்.)
இலங்கை 2ஆவது இன்: 279 (தனஞ்சய டி சில்வா 82, நிஷான் மதுஷ்க 52, ரமேஷ் மெண்டிஸ் 42, தினேஷ் சந்திமால் 28, அப்ரார் அஹ்மத் 68 – 3 விக்., நொமான் அலி 75 – 3 விக்., அகா சல்மான் 39 – 2 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 64 – 2 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 131 ஓட்டங்கள்) 133 – 6 விக். (இமாம் உல் ஹக் 50 ஆ.இ., சவ்த் ஷக்கீல் 30, பாபர் அஸாம் 24, ப்ரபாத் ஜயசூரிய 56 – 4 விக்.)