முதலமைச்சர் எடப்பாடிக்கு வந்த சோதனை! பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட அதே சிக்கல்
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட அதே சிக்கல் இந்நாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், தமிழகத்தின் முதலமைச்சரானார் ஓ.பன்னீர்செல்வம். எனினும் அதிமுகவில் ஏற்பட்ட பதவி மோகத்தினாலும், அதிகார ஆசையினாலும் ஓ.பன்னீர்செல்வம் பதவியை இராஜினாமா செய்து கொண்டார்.
எனினும், தன்னுடைய சொந்த விருப்பத்தின் பெயரிலேயே தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனாலும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியின் முன் தியானத்தில் ஈடுபட்டிருந்த அவர், சில உண்மைகளை வெளிப்படுத்தினார்.
ஜெவின் மறைவிற்குப் பின்னர் தன்னை முதலமைச்சராக்கிய சசிகலா தரப்பு, பின்னர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், எந்தவிதமான பணிகளையும் செய்யவிடாமல் தடுத்தனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், தன்னை அவமானப்படுத்தியதாகவும் அவர் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அன்றிலிருந்து அதிமுக அணி இரண்டானது. பன்னீர், சசிகலா அணியாக உடைந்து பனிப்போர் மூண்டது. பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போக, முதலமைச்சராக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், முன்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்ட அதே இடர்பாடுகளும், நெருக்கடிகளும் இந்நாள் முதல்வர் எடப்பாடிக்கும் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் அதிமுகவினர்.
சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனின் அடுத்தடுத்த கட்டளைகளால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் அதிருப்தியில் உள்ளாராம்.
சசிகலா சிறைக்குச் சென்ற பின், அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான தினகரன், ஒட்டு மொத்த கட்சி மற்றும் ஆட்சியை தன் கட்டுப்பாட்டி வைக்க முயற்சி செய்து வருகிறாராம்.
கட்சி தலைமையில் உள்ள தினகரன், முதல்வர் பழனிச்சாமியை இதை செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என கட்டுப்படுத்தி வருவதாகவும், இதற்காக சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோரின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதீர்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தினகரன் கூறுவதால் தன்னுடைய பணிக்கு இடையூறு ஏற்படுவதையும், தன்னுடைய செயற்பாட்டை கட்டுப்படுத்துவதாக முதல்வர் கருதுகிறார்.
இந்நிலையில் தினகரனின் கட்டளைகளால் அதிருப்தியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, நான் சசிகலாவுக்கு மட்டும் தான் விசுவசி.
அதனால் அவரது குடும்பமே என்னை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதும், அடிமையாக்க துடிப்பதும் சரியா? என்று கடும்கோபத்தில் இருக்கிறாராம்.
முன்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எப்படியான நிலை ஏற்பட்டதோ அதே நிலை தான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக தான் எடப்பாடி பழனிசாமி சசிகலா தரப்பில் இருக்கிறார் என்று பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதுவாயினும் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களை சசிகலா தரப்பின் கட்டுப்படுத்தி வைக்க முயற்சிப்பதானது பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பெரும் பலமாக அமைந்து விடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பன்னீரைப்போல நாளை எடப்பாடியும் தன்னுடைய முடிவுகளை மாற்றிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதிமுகவில் எதுவும் நடக்கலாம்.